லக்னோ: உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்தின் இரண்டாவது ஆட்சியில், மூன்று முதல்வர்கள், 62 அமைச்சர்கள் இடம் பெறுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது இரண்டு நாள் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு லக்னோ திரும்பினார். டெல்லியில் பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களை சந்தித்த பிறகு புதிய அமைச்சரவை அமைத்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். பிரதமர் மோடி, தேசிய தலைவர் ஜே.பி நட்டா, அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்த யோகி ஆதித்யநாத், புதிய அமைச்சர்கள் பட்டியல் குறித்து விளக்கினார். ஏற்கனவே துணை முதல்வர் உள்பட 11 அமைச்சர்கள் தேர்தலில் தோற்றதால், புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அரசு அமையும் தேதி மற்றும் அமைச்சரவை பட்டியலில் உள்ளவர்கள் பெயர்கள் இன்னும் முறையாக வெளியிடப்படவில்லை. இம்முறை மூன்று துணை முதல்வர்கள் உட்பட மொத்தம் 62 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என நம்பப்படுகிறது. 28 முதல் 30 கேபினட் அமைச்சர்கள், 11-12 மாநில அமைச்சர்கள், 23-24 இணை அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.