ரஷ்யா உக்ரைன் போர் மூலம் ரஷ்யாவை பற்றிய மக்களின் தேடல் அதிகரித்துள்ளது. அங்கே காவல்துறை எப்படி செயல்படுகிறது என்பதற்கு ஒரு உதாரணமான நிகழ்ச்சியை இந்த கட்டுரையில் பார்க்கலாம். ஐரோப்பாவில் அதிகமான கோடீஸ்வரர்கள் வாழ்கிற நகரம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ. அதன் தென்பகுதியில் உள்ளது பிஸ்டா பூங்கா. அந்த பூங்காவின் அருகே உள்ளது தான் தென் மாஸ்கோ புறநகர்.
சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்பு, தென் மாஸ்கோ புறநகர் மக்கள் உணவிற்கே கஷ்டப்படும் நிலையில் இருப்பவர்கள். சாப்பாட்டுக்கே கஷ்டப்படுபவர்கள் பொழுது போக்கிற்கு செலவழிக்க பணம் கிடையாது. அவர்களுக்கான இலவச பொழுது போக்கு பிஸ்டா பூங்காவில் உள்ள மேஜைகளில் வரையப்பட்ட சதுரங்கங்களை பயன்படுத்தி செஸ் விளையாடுவதும், அந்த பூங்காவில் உலாவுவதும் தான். அந்த பூங்காவின் அடர்ந்த பகுதியில் நடந்து சென்ற மிகையில் ஓடிச்சுக் என்ற இளைஞரை 1992 ஆம் ஆண்டு காணவில்லை. அவரது உறவினர்கள் காவல்துறையிடம் சென்றனர்.
காணாமல் போனவர் எங்காவது வேலை தேடி போயிருப்பார் என்று பதில் தந்தனர் காவல்துறையினர். ஏமாற்றமடைந்த உறவினர்கள் காவல்துறைக்குப் பயந்து அமைதியாகிவிட்டனர். அதன் பிறகு ஒன்பது ஆண்டுகளுக்கு யாரும் காணாமல் போகவில்லை. 2001 ஆம் ஆண்டு மட்டும் அந்த பூங்காவில் உலாவ சென்ற 15 நபர்களை காணவில்லை. காணாமல் போனவர்களின் உறவினர்கள் காவல்துறையிடம் முறையிட்ட பொழுது, காவல்துறை அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதற்கடுத்த மூன்று ஆண்டுகளில் இன்னும் 25 நபர்கள் அந்த பூங்காவில் காணாமல் போயினர்.
எங்கேயாவது போயிருப்பார்கள், எப்பொழுதாவது வருவார்கள் என்று காவல்துறை கிளிப்பிள்ளை போல திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தது. காவல்துறையை எதிர்த்து மக்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. 2001 இல் இருந்து 2005 ஆம் ஆண்டிற்குள் 39 நபர்கள் காணாமல் போன போதும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மக்கள் பிஸ்டா பூங்காவிற்குள் செல்வதை பெருமளவு தவிர்த்திருந்தனர். ஆனால், சிலர் தொடர்ந்து பூங்காவிற்குள் சென்று கொண்டிருந்தனர். நவம்பர் மாதம் 2005 ஆம் ஆண்டு நிகோலாய் என்ற ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி பூங்காவிற்குள் சென்றார், திரும்பவில்லை. இரண்டு நாட்கள் கழித்து பூங்காவிற்குள் சென்ற சிலர் அங்கே வினோதமாக எதோ கிடப்பதை பார்த்து காவல்துறைக்கு தகவல் தந்தனர்.
ஆச்சரியமாக காவல்துறை பூங்காவிற்குள் சென்றது. அங்கே அவர்கள் கண்டெடுத்தது நிகோலாயின் இறந்த உடல். அவரது பின் மண்டை பிளக்கப்பட்டு இறந்திருந்தார். இப்பொழுது காவல்துறை பூங்காவை தேடியது, காணாமல் போன நாற்பது நபர்கள் பற்றிய எந்த தடயமும் கிடைக்கவில்லை. ரஷ்ய காவல்துறை தேடிய லட்சணம் அப்படி இருந்தது. நிகோலாய் கொலைக்கு பின்பும் ஒன்பது பேர் அந்த பூங்காவில் கொலை செய்யப்பட்டனர். அவர்கள் எல்லோரும் பின் மண்டை பிளக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர். பூங்காவில் கொலை செய்யும் அந்த மர்ம நபரை “பிஷ்டா பூங்கா வெறியன்” என்று மக்கள் அழைத்தனர். கொலை வெறியன் உலவும் அந்த பூங்காவிற்குள் ஒரு சிலரே சென்று கொண்டிருந்தனர்.
என்ன ஆனாலும் பரவாயில்லை என்று அந்த பூங்காவிற்குள் சென்று கொண்டிருந்த சிலரில் ஒருவர் அலெக்சாண்டர். இவர் சிறுவனாக இருக்கும் பொழுது தலையில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டது. அவரது பெற்றோரிடம் சிகிச்சை அளிக்க வசதியில்லாததால், அப்படியே விட்டுவிட்டனர். எனவே மிகுந்த அறிவாற்றல் குறைந்தவராக இருந்தார். பள்ளியில் மற்ற குழந்தைகள் இவரை ஏளனம் செய்தனர். எனவே, இவருக்கு நெருக்கமான நண்பர்கள் யாரும் கிடையாது. இதை உணர்ந்த அலெக்சாண்டரின் தாத்தா அவருக்கு செஸ் விளையாட சொல்லிக் கொடுத்தார்.
ஏதோ ஒரு காரணத்தால், சில நாட்களிலேயே செஸ்ஸில் சிறந்த திறமை வந்தது அலெக்சாண்டருக்கு. இதை உணர்ந்த தாத்தா தனது பேரனை பிஸ்டா பூங்காவில் செஸ் விளையாடும் தன் நண்பர்களிடம் அறிமுகம் செய்தார். அந்த பூங்காவில் செஸ்ஸில் சிறந்து விளங்கியதால், அலெக்சாண்டரை எல்லோருக்கும் பிடித்துப் போனது. அலெக்சாண்டருக்கு பூங்கா தான் உலகம் என்று ஆகிவிட்டது. எனவே பலர் காணாமல் போன பிறகும், தொடர்ந்து பூங்காவிற்குச் சென்றார் அலெக்சாண்டர். ஒரு நாள், அவர் வேலை பார்க்கும் கடையில் ஒரு பெண்ணை கவனித்த அலெக்சாண்டருக்கு அவரை மிகவும் பிடித்துப் போனது. அவர் பெயர் லோரிசா கொலிஜினா. மாலையில் அந்த பெண்ணை பூங்காவில் உலாவ அழைத்தார். ஆச்சரியமாக அவரும் சம்மதித்தார். ஏனென்றால், 60 நபர்கள் காணாமல் போன பூங்காவிற்குள் பொது மக்கள் செல்வதை தவிர்த்த காலமது. ஆச்சரியமாக, லோரிசா கொலிஜினா அலெக்ஸாண்டருடன் சென்றார்.
பூங்காவின் அடர்ந்த பகுதிக்கு சென்ற பொழுது அலெக்சாண்டர் முன்னே சென்று கொண்டிருந்தார். அவரை தொடர்ந்து சென்று கொண்டிருந்த லோரிசா நடப்பதை நிறுத்தியதை உணர்ந்த அலெக்சாண்டர் திரும்பிப் பார்த்தார். அழுதுகொண்டே தரையில் அமர்ந்திருந்த லோரிசா கேட்டார், “நீ தானே அந்த பிஸ்டா பூங்கா வெறியன்?”. ஆம் என்பது அலெக்சாண்டரின் பதில். லோரிசா பின் மண்டை பிளக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் கடையில் வேலை செய்த மெரினா என்ற பெண்ணை பூங்காவிற்குள் உலவ அழைத்தார். அவரும் சம்மதித்தார். ஆனால், பூங்காவிற்குள் நுழையும் முன் தன் வீட்டிற்கு சென்று அலெக்ஸாண்டருடன் பூங்காவின் உள்ளே செல்வதையும், அலெக்சாண்டரின் தொலைபேசி எண்ணையும் எழுதி வைத்து விட்டு சென்றார், மெரினா. வழக்கம் போல மெரினா பின் மண்டை பிளக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். மெரினா எழுதிவைத்திருந்த குறிப்பை வைத்து அலெக்சாண்டரை கைது செய்தது காவல்துறை, 62 கொலைகளுக்குப்பிறகு! இந்த கொலைகளை அலெக்சாண்டர் தொடங்கியது 1992. அவரும் அவரது நண்பர் ஒருவரும் கொலை செய்வது என்று முடிவெடுத்தனர். கொலை செய்ய பூங்காவிற்குள் சென்றனர்.
உள்ளே சென்ற பிறகு அலெக்சாண்டரின் நண்பர் கொலை செய்யும் எண்ணத்தை மாற்றிக் கொண்டார். எனவே திட்டத்தை கைவிட்டு வீட்டிற்கு செல்ல முடிவெடுத்தார். அலெக்ஸாண்டரும் சரி என்று சொல்லி, வீட்டிற்கு செல்ல திரும்பிய நண்பரின் மண்டையை பிளந்து கொலை செய்து, அங்கிருந்த 30 அடி பாதாள சாக்கடையில் தூக்கிப் போட்டார். அந்த நண்பர் தான் பூங்காவில் முதல் முதலில் காணாமல் போன மிக்கயில். அதன் பிறகு நாற்பது நபர்களை மண்டையை பிளந்து அந்த பாதாள சாக்கடையில் போட்டார். அவர்களில் 16 மற்றும் 17 ஆவது பாதிக்கப்பட்ட இரண்டு பேர் சாக்கடையில் 30 அடி ஆழத்தில் விழாமல் மேலே சிக்கிக்கொண்டனர். அதை கவனிக்காத அலெக்சாண்டர் பூங்காவை விட்டு வெளியேறிவிட்டார். அவர் சென்ற பிறகு பாதாள சாக்கடையில் இருந்து வெளியே வந்த அந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தனர்.
அப்பொழுது காவல்துறை நடத்திய விசாரணையில் தங்களை கொலை செய்ய முயன்றது அலெக்சாண்டர் என்று தெளிவாக விளக்கி விட்டனர். ஆனால், காவல்துறை அலெக்சாண்டரை கைது செய்வதற்குப் பதிலாக குற்றம் சுமத்திய இருவரையும் கைது செய்து விடுவதாக மிரட்டி அமைதியாக்கி விட்டது. காவல்துறையின் இந்த மோசமான நடவடிக்கையால், மேலும் 43 நபர்களை கொலை செய்தார் அலெக்சாண்டர். அபரிமிதமான அதிகாரம் காவல்துறை கையில் கொடுக்கப்பட்டால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு உதாரணம் ரஷ்ய காவல்துறை.
–முனைவர்.கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி, மூத்த முதன்மை விஞ்ஞானி, சி.எஸ்.ஐ.ஆர்