‘வருமானத்திற்கு அதிகமாக 3,928% சொத்து’- எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உட்பட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம், முன்னாள் அமைச்சர் வேலுமணியிsன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இதேபோன்றதொரு சோதனையை நடத்தியிருந்தனர். அப்போது அவரது வீடு, அலுவலகம் மற்றும் அவரது பங்குதாரர்கள், இல்லங்கள், அலுவலர்கள் உள்பட தமிழகம் முழுவதும் 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை மாநகராட்சி மற்றும் கோயம்புத்தூர் முனிசிபல் கார்ப்பரேஷன் ஆகியவற்றில் 811 கோடி ரூபாய் டெண்டர் விவகாரத்தில் ஊழல் செய்திருப்பதாகக்கூறி இந்த சோதனை நடைபெற்றது.
அச்சோதனையின் முடிவில் கணக்கில் காட்டப்படாத 13 லட்சம் ரொக்கம், நிறுவனங்களின் பணபரிவர்த்தனைகள், 2 கோடி வைப்புத்தொகை ஆவணங்கள், மாநகராட்சி சம்பந்தப்பட்ட ஆவணங்கள், ஹார்டிஸ்க், வங்கி லாக்கர் சாவி உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.
image
அதைத்தொடர்ந்து எஸ்பி வேலுமணி உட்பட 17 பேர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 120(பி) – கூட்டு சதி, 420 – மோசடி, 409 – நம்பிக்கை மோசடி, 109 – அரசு ஊழியர் லஞ்சம் பெற்றுக் கொண்டு சாதகமாக செயல்படுதல் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 2 பிரிவுகள் என மொத்தம் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.
இந்நிலையில் தற்போது கோவையில் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை நடத்திவருகின்றனர். இந்த முறை அவர்மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பு செய்திருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவருடன் சேர்த்து மேலும் 13 பேர்மீதும் இதே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
image
அமைச்சராக பதவிவகித்த காலத்தில் சுமார் ரூ.58.23 கோடி (அதாவது 3,928% வருமானத்தை விட அதிகமாக) சேர்த்திருப்பதாக இந்த வழக்கு எஸ்.பி.வேலுமணி மற்றும் அவர் குடும்பத்தினர் மீது தொடரப்பட்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்திருந்த சொத்துகளின் அடிப்படையில், இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. முதல் தகவலறிக்கையின்படி, 27.04.2016 முதல் 15.03.2021 வரையுள்ள காலக்கட்டத்தில் மட்டும் வருமானத்தை விட அதிகமாக ரூ.58,23,97,052 சொத்து சேர்த்ததாக எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
image
இந்த வழக்கின் அடிப்படையில், அவருக்கு தொடர்புடைய சுமார் 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. எஸ்.பி.வேலுமணியின் உதவியாளர் சந்தோஷ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். கோவை, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அவருக்கு தொடர்புடைய நபர்களின் வீடுகளில் சோதனை நடக்கிறது. சென்னையில் 8 இடங்கள், சேலத்தில் 4 இடங்கள், திருப்பத்தூர்-2, நாமக்கல்-1, கிருஷ்ணகிரி-1 ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்துவருகின்றது. அதில் கோவையில் எஸ்.பி.வேலுமணி வீடு உட்பட 41 இடங்களில் சோதனை நடத்திவருகின்றனர். அவரிடமும் விசாரணை நடந்துவருகின்றது.

சமீபத்திய செய்தி: ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு… பெங்களூருவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.