சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி மறைமுக தேர்தலின்போது வாக்குச்சீட்டை எடுத்து சென்றவரை தேர்தல் அதிகாரியும், காவல்துறையும் தடுக்காத விவகாரத்தில் மாநில தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது குறித்து பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டதையடுத்து, தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4-ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், திமுக கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள் ரகளையில் ஈடுபட்டதால், இந்த மறைமுக தேர்தல் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், மறைமுக தேர்தலை நடத்தக் கோரி தேர்வு நிலை பேரூராட்சியின் 8 உறுப்பினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
தலைவர் பதவிக்கு போட்டியிடவிருந்த ஸ்டாலின் உள்ளிட்ட 8 உறுப்பினர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மொத்தமுள்ள 15 உறுப்பினர்களில் 8 உறுப்பினர்கள் எனக்கு ஆதரவளித்தனர். மறைமுக தேர்தல் நாளன்று 3 திமுக உறுப்பினர்கள் வரவில்லை. இதனால் திமுக கூட்டணி கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள், தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான வேட்புமனுக்களை பறித்து கிழித்தெறிந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால், தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.
தேர்தல் தள்ளிவைப்பு குதிரை பேரத்துக்கும், கட்சித் தாவலுக்கும் இடமளிக்க வாய்ப்பு உள்ளதால் போதிய போலீஸ் பாதுகாப்புடன், தாமதமின்றி மறைமுக தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, மறைமுக தேர்தல் நாளன்று எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையம் வீடியோ பதிவுகளை தாக்கல் செய்தது. இந்த வீடியோ காட்சிகளை பார்வையிட்ட நீதிபதிகள், வாக்குச் சீட்டை ஒருவர் பறித்து செல்கிறார். அவரை தடுக்காமல் காவல் துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறனர். இதை ஏற்றுக் கொள்ள முடியாது என அதிருப்தி தெரிவித்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்திய மாநில தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு பாராட்டுக்குரியது என்ற போதும், இது போன்ற நிகழ்வுகளை தடுத்திருக்க வேண்டும். மேலும், வாக்குச்சீட்டுகளை பறித்துச் சென்றவரை ஏன் கைது செய்யவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது, சம்பந்தபட்ட நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
பின்னர் நீதிபதிகள், இந்த விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து நாளை விளக்கம் அளிக்க, மாநில தேர்தல் ஆணையருக்கு உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர்.