அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியில் உள்ள டால்டனில் டீஜா பென்னட் (22) என்ற பெண் வசித்து வருகிறார். இவர் ஷாப்பிங் முடித்து விட்டு, தனது 3 வயது மகனை காரின் பின் இருக்கையில் உட்கார வைத்துவிட்டு, அவர் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து காரை ஓட்ட தயாராகி கொண்டிருந்தார்.
அப்போது அந்த சிறுவன், காரின் பின் இருக்கையில் இருந்த தனது தந்தையின் துப்பாக்கியை கையில் எடுத்து விளையாடியதில் தவறுதலாக குண்டு பாய்ந்தது. அதில் காரின் முன் இருக்கையில் உட்கார்ந்திருந்த சிறுவனின் தாயாரின் முதுகுப் பகுதியில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது.
துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், டீஜா பென்னட்டை மீட்டு அருகிலிருந்த சிகாகோ பல்கலைக்கழக மருத்துவ மையத்துக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.
இதையடுத்து, சிறுவனின் தந்தை ரோமல் வாட்சன் (23) மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அவர் சட்டவிரோதமாக பாதுகாப்பற்ற முறையில் துப்பாக்கியை காரில் கொண்டு சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நாளை முதல் மீண்டும் முழு ஊரடங்கு – அரசு அதிரடி அறிவிப்பு!
இந்த அதிர்ச்சி சம்பவத்திலிருந்து மீண்டு வர அந்த குழந்தைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மனநல ஆலோசனை கொடுத்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் 2015 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கு இடைபட்ட காலத்தில், 2,070 குழந்தைகள் தற்செயலாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர், இதில் மொத்தம் 765 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 90 சதவீதம் பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.