திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் மற்றும் சென்னை கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை ஆழித்தேருக்கு உண்டு. பங்குனி பெருவிழாவையொட்டி இன்று காலை சிறப்பு பூஜைகளுடன் தேரோட்டம் தொடங்கியது. ஆரூரா, தியாகேசா என விண்ணதிர முழக்கமிட்டபடி பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர். இதனால் திருவாரூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. திருவாரூர் வீதிகளில் ஆழித்தேர் அசைந்தாடி வரும் அழகை தரிசிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
ஆழித்தேரை தொடர்ந்து அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் தேரோட்டமும் நடைபெறுகிறது. இதேபோல சென்னை கபாலீஸ்வரர் கோயிலிலும் பங்குனி பெருவிழா தேரோட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 9ஆம் தேதி கொடியேற்றப்பட்டு, முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. நூற்றுக்கணக்கான மக்கள் மாட வீதிகளில் கூடி, தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். தேரோட்டம் காரணமாக கோயிலை சுற்றியுள்ள நான்கு மாட வீதிகளிலும் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM