பெய்ஜிங்,
சீனாவின் உகான் மாகாணத்தில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதால், நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் உலகம் முழுவதும் அதிகரித்த கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.
சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவில் புதிய உச்சத்தை எட்டியது. நாட்டில் உள்ள 19 மாகாணங்களில் தொற்று பாதிப்பு தீவிரமாக உள்ளது. புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் தாக்கத்தால் சீனாவில் கடந்த சில வாரங்களாக தொற்று பரவல் அதிகரித்து வந்தது.
இந்த சூழலில், சீனாவில் ஒரே நாளில் புதிதாக 5,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் ஜிலின் மாகாணத்தில் அதிகபட்ச பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக சீனாவின் பல்வேறு நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஹாங்காங் எல்லைக்கு அருகில் உள்ள ஷென்சென் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு மாகாணங்களில் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் சீனாவில் பல்வேறு மாகாணங்களில் வசிக்கும் 30 கோடிக்கும் அதிகமான மக்கள் வீடுகளில் முடங்கி தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி சீனாவில் நாடு முழுவதும் 13 நகரங்களில் முழுமையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பல நகரங்களில் பகுதியளவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் சற்று தணிந்து உலக நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி வரும் நிலையில் சீனா பல நகரங்களை முடக்கி வருகிறது. அதிக வேகத்துடன் பரவும் ஒமைக்கரானே பாதிப்பு அதிகரிக்க காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கு மட்டுமல்லாமல், பரிசோதனைகளை அதிகரிக்கவும் சீனா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தொற்று பாதிப்பை விரைவாக கண்டறியும் வகையில் ரேபிட் ஆன்டிஜென் சோதனைகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.