தமிழக அரசின் வேளாண் துறை பட்ஜெட் தொடர்பான கருத்துக் கேட்புக்கூட்டம் சென்னை எழிலகத்தில் நேற்று நடைபெற்றது. தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்தினை முன்மொழிந்து வருகின்றனர்.
அப்போது பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு முன்னதாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள விவசாய பிரதிநிதிகளுடன் காணொலி வாயிலாகவும், நேரடியாகவும் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டங்களில் விவசாயிகள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் எதிரொலிக்கும்.
தொடர்ச்சியாக, விவசாயிகள் மாவட்ட ஆட்சியர்களிடம் தங்களது கோரிக்கைகளைத் தெரிவித்தபடி இருக்கின்றன. அவை அனைத்தும் அரசின் கவனத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. வேளாண் துறைக்கான சிறப்பு பட்ஜெட்டை எப்படி வகுப்பது என்பது குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை நிதியமைச்சர் மற்றும் துறைசார் அதிகாரிகளோடு கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்றைக்கு தமிழக அளவில் உள்ள விவசாய சங்க பிரதிநிதிகளிடம் கருத்துகளை கேட்கவிருக்கிறோம்.
இக்கருத்துக் கேட்புக் கூட்டத்தில் விவசாயிகளின் தேவைகள் சார்ந்து கலந்துரையாடப்பட்டு இந்த ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் இறுதி செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
கருத்துக்கேட்புக் கூட்டத்தில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத்தலைவர் வேட்டவலம் மணிகண்டனிடம் பேசினோம்.
“கேரளாவைப் போலவே தமிழ்நாட்டிலும் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும். தனியார் மூலம் வழங்குவதால் உரங்களுக்கான தட்டுப்பாடு செயற்கையாக உருவாக்கப்படுகிறது. அதுவே மாவட்ட அளவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக உரங்கள் வழங்கப்படும்போது உரங்கள் தட்டுப்பாடு ஏற்படாமல் குறைந்த விலையில் உரங்கள் கிடைக்க ஏதுவாக இருக்கும்.
திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கத்தில் இயங்கி வந்த 16,100 ஏக்கர் அளவிலான மத்திய மாநில அரசுப்பண்ணை தற்போது மூடப்பட்டு விட்டது. மாநில அரசு அதனை கையிலெடுத்து KVK தொடங்கிட வேண்டும். காட்டுயிர்களால் பயிர்கள் சேதமடைகின்றன. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொடைக்கானல், நீலகிரி மட்டுமின்றி சமவெளிகளிலும் மிளகு வளர்வதற்கான சூழல் உள்ளது. எனவே மிளகு உற்பத்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வேளாண் துறை மூலம் கட்டப்பட்ட உலர்களங்கள் தற்போது உள்ளாட்சித் துறைக்கு மாற்றி விட்டார்கள். அதனை மீண்டும் வேளாண் துறைக்கு மாற்றுவதன் மூலம் நெல் விவசாயிகள் பயன்பெறுவர். கூட்டுப்பண்ணைத் திட்டத்துக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வருவதை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். நிலக்கடலையிலிருந்து கடலை எண்ணெய் தயாரிக்கும் டான்காப் தொழிற்சாலைகளை மீண்டும் அமைத்திட வேண்டும். தமிழ்நாட்டில் கரும்பு ஆலைகள் மூடப்பட்டு வருவதால் கரும்பு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரும்புச்சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் மொலாசஸ் பலவித பொருள்கள் தயாரிப்பதற்கு மூலப்பொருளாக இருக்கிறது. இதன் பயன்பாட்டை அதிகரித்தால் அரசுக்கும் வருவாய் கிடைக்கும், கரும்பு உற்பத்தியாளர்களின் வாழ்வும் மேம்படும்.
விளைநிலத்தில் பூச்சிக்கொல்லி மற்றும் விதை தெளிப்பதற்காக பயன்படுத்தப்படும் ட்ரோனை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலமாக வாங்கி அனைத்து விவசாயிகளின் பயன்பாட்டுக்கும் கொண்டு வர வேண்டும். வேளாண்துறையில் உள்ள காலி இடங்களை நிரப்ப வேண்டும். ஆத்மா திட்டத்தில் தற்காலிக பணியாளர்களாய் பணிபுரியும் வேளாண் பட்டதாரிகளை நிரந்தர பணியாளர்களாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார் வேட்டவலம் மணிகண்டன்.