பெங்களூரூ: “இஸ்லாம் மதத்தில் ஹிஜாப் அணிவது அத்தியாவசியப் பழக்கமில்லை. அதனால், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும்” என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக உடுப்பி முஸ்லிம் மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கை தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் அடங்கிய அமர்வு விசாரித்தது. மாணவிகள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் தேவதத் காமத், ரவிவர்ம குமார் ஆகியோரும், அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பிரபுலிங் நவத்கியும் வாதிட்டனர். உடுப்பி பி.யு. கல்லூரி சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.எஸ்.நாகனந்த் வாதிட்டார்.
இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்புக்காக நீதிமன்றம் கூடியது. தீர்ப்பை ஒட்டி நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், கர்நாடகாவில் முன்னெச்சரிக்கை நடவடிகை வரும் மார்ச் 21 ஆம் தேதி வரையிலும் பொது இடங்களில் மக்கள் பெருமளவில் கூடும் நிகழ்வுகளுக்குத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மங்களூருவில் மார்ச் 15 ஆம் தேதி வரை பெரும் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உடுப்பி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பை வாசித்த நீதிபதிகள்.. “ஹிஜாப் அணிவது இஸ்லாமிய நம்பிக்கையின்படி அத்தியாவசி பழக்கம் இல்லை. ஆகையால் கல்வி நிலையங்களில் ஹிஜாப், காவி துண்டு என மத அடையாளங்களை தாங்கி வர தடை விதித்து பிப்ரவரி 5, 2022ல் விதிக்கப்பட்ட தடை செல்லும். பள்ளிச் சீருடை என்பது சட்டபூர்வமானதே.
அது பேச்சு உரிமை, தனிநபர் உரிமை என அரசியல் சாசன உரிமைகள் எதையும் பறிப்பதாகாது. பிப்ரவரி 5,,2002ல் கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும். உடுப்பி அரசு பியு கல்லூரி நிர்வாகிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முகாந்திரம் இல்லை” என்று தெரிவித்தனர்.