சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் செய்ய அனைவருக்கும் தெரிந்தது ஹேஷ் டேக் குறியீடு மட்டும்தான். ஆனால், எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன் ஹேஷ் டேக்கின் அடுத்த பரிணாமமாக டி ஹேஷ் டேக் கண்டுபிடித்துள்ளார். மேலும், டி ஹேஷ் டேக்கை எப்படி பயன்படுத்துவது என்று பயனாளர் கையேடு நூல் வெளியிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களின் காலத்தில் உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் பல விவகாரங்கள் ஹேஷ் டேக் குறிப்பிட்டு ட்ரெண்டிங் செய்யப்படுகிறது. இந்த ஹேஷ் டேக் குறியீடு சமூக ஊடகங்களில் சின்ன விஷயத்துக்கு எல்லாம் பயன்படுத்தப்பட்டு ட்ரெண்ட் செய்யப்படுகிறது. அதனாலேயே, சில சமயங்களில் இந்த ஹேஷ் டேக் எரிச்சலையும் உருவாக்கிவிடுகிறது.
இந்த நிலையில்தான், எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன், ஹேஷ் டேக்கின் போதாமையை உணர்ந்து டி ஹேஷ் டேக் என்ற புதிய குறியீட்டை கண்டுபிடித்துள்ளார். எழுத்தாளர் உருவாக்கியுள்ள டி ஹேஷ் குறியீடு சமூக ஊடகப் பயனர்கள் மத்தியிலும் ஊடகங்களிலும் கவனத்தைப் பெற்றுள்ளது.
டி ஹேஷ் டேக் பயனாளர் கையேடு என்று 215 பக்கம் கொண்ட நூல் வெளியிட்டுள்ள எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன் டி ஹேஷ் பற்றி சமூக ஊடகப் பயனர்களுக்கு விளக்குகிறார்.
இந்த டி ஹேஷ் குறித்து எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன் கூறுகையில், “டி ஹேஷ் என்பது ஒரு சர்வதேசக் குறியீடு!
சமூகம் சார்ந்த பன்மையத்தன்மை கொண்ட இந்தப் புதிய குறியீட்டுக் கோட்பாட்டை உருவாக்கியதில், ஒரு தமிழனாக பெருமையடைகிறேன்.
ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும், ஹேஷ்டேக்கின் சமூக மற்றும் அரசியல் சார்ந்த பயன்பாடுகள் குறித்து அனைவரும் அறிவோம். இந்த ஹேஷ்டேக் குறியீடு ஆக்ட்டிவிஸம், மனித உரிமைகள், சமூக விழிப்புணர்வு, குழு ஒருங்கிணைப்பு, போராட்டச் செயல்பாடுகள்.. போன்ற அரசியல் மற்றும் சமூகக் கருத்துக்களிலும், செயல்பாடுகளிலும் பெரிதளவில் பங்கு வகிக்கிறது. ஆனால், இது, மனித சமூக வாழ்வில், ஒற்றைப் பரிமாணத்தில் மட்டுமே செயல்படுகிறது!
தற்கால டிஜிட்டல் தன்மை வாய்ந்த உலகளாவிய மனித வாழ்வு என்பது, ஒற்றைப் பரிமாணத்தில் தட்டையாய் நெளிவதல்ல. அது பல்வேறு பரிமாணங்களில் கிளை வெட்டித் தாவும் எல்லைகளற்ற நீட்சியில் விரிந்து பரவுகிற நீண்ட பயணம். இந்த நவீன மனித வாழ்வியலின் பல்வேறு பரிமாணங்களுடன் இணைந்து போவதற்கு, இந்த ஹேஷ்டேக்கின் பயன்பாடு போதாமையாக இருக்கிறது என்பதை பல்வேறு தருணங்களில் உணர்ந்தேன்.
எனவே, இப்போது, இந்த ஹேஷ்டேக்கை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த வேண்டிய அவசியம் வந்து விட்டதை உணர்ந்து, பன்மையத் தன்மை கொண்ட ஒரு புதிய குறியீட்டை உருவாக்கும் முயற்சியில் இறங்கியதன் விளைவு, டி ஹேஷ் !
இந்த டி ஹேஷ் ஏன், எப்படி, எதற்காக? என்ற பயனாளர்களின் கேள்விகளுக்கு விடை காணும் முகமாக, இந்தப் பயனாளர் கையேடு விரிவான பார்வைகளை, 215 பக்கங்களில் முழுமையாக முன்வைக்கிறது.” என்று கூறுகிறார்.
ஹேஷ் டேகின் அடுத்த பரிணாமமாக பன்மையத் தன்மை கொண்ட ஒரு புதிய குறியீட்டை கண்டுபிடித்துள்ள எழுத்தாளர் கௌதம சித்தார்த்தனுக்கு எழுத்தாளர்கள், வாசர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் என பலரும் பாராட்டுதல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“