புதுடெல்லி: நாடு முழுவதும் 12 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நாளை முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது.
இதுகுறித்து அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று கூறியதாவது: நாடு முழுவதும் 12 – 14 வயதுக்கு உட்பட குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி புதன்கிழமை (நாளை) தொடங்கப்படும். மேலும், பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. எனவே, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியும் தொடங்கும்.
நாட்டில் 12 – 14 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து, அறிவியல் துறை நிபுணர்களுடன் தீவிரமாக கலந்தாலோசித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கார்பிவேக்ஸ் தடுப்பூசி போடப்படும். இந்த தடுப்பூசியை ஹைதராபாத்தை சேர்ந்த பயலாஜிக்கல் இவான்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
குழந்தைகள் பாதுகாப்பாக இருந்தால், நாடும் பாதுகாப்பாக இருக்கும். எனவே மேற்குறிப்பிட்ட வயதுள்ள குழந்தைகள் உள்ள குடும்பத்தினர் அவர்களுக்கு தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு மாண்டவியா கூறினார்.
– பிடிஐ