புதுடெல்லி: 2 ஆண்டுகளுக்கு மட்டும் கேரளாவில் அமைச்சர்களுக்கு உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அரசு சார்பில் ஓய்வூதியப் பயன்களை வழங்குவது ஏன் என்று கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
டீசல் விலை உயர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கேரளமாநில போக்குவரத்துக் கழகம்(கேஎஸ்ஆர்டிசி) சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில் கேஎஸ்ஆர்டிசி கூறியுள்ளதாவது: 2006-ம் ஆண்டுகொண்டு வரப்பட்ட பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியச் சட்டத்தின்படி எரிபொருள் விலையை நிர்ணயம் செய்ய சுதந்திரமான அதிகாரம் கொண்ட அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கோருகிறோம். டீசல் விலை உயர்வால் கேஎஸ்ஆர்டிசி-க்கு நாள்தோறும் கூடுதல் செலவாகிறது.
எனவே, டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவேண்டும். இதனால்மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது தொடர்பாக முன்னாள் நீதிபதி தலைமையில் ஆணையம் அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் நசீர், கிருஷ்ணா முராரி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிநசீர் கூறும்போது, “கேரளாவில்2 ஆண்டுகளுக்கு மட்டும் அமைச்சர்களுக்கு உதவியாளர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். பின்னர் அவர்கள் மாற்றப்பட்டு புதிதாக உதவியாளர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.
ஆனால் 2 ஆண்டுகள் மட்டுமேபணியாற்றிய அந்த உதவியாளர்களுக்கு அரசு சார்பில் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது. இதனால் அரசுக்குக் கூடுதல் செலவாகிறது. இந்த முறை கேரள மாநிலத்தில் மட்டும்தான் நடைபெறுகிறது.
ஏன் இந்த நடைமுறை என நாங்கள் கேள்வி எழுப்புகிறோம். கேரள மாநிலமானது இவ்வளவு வளம் படைத்ததாகவும், பணக்கார அரசாகவும் இருக்கும்போது, எரிபொருள் விலையுயர்வையும் சமாளிக்க முடியும்.
2 ஆண்டுகளுக்கு ஒரு முறைஅமைச்சர்களுக்கு உதவியாளர்கள் நியமனம் செய்து அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் தர வசதி இருக்கும்போது எரிபொருள் விலையுயர்வையும் சமாளிக்கலாம். எங்களின் வார்த்தைகளை மாநில அரசுக்குத் தெரிவியுங்கள்” என்றார்.
கேஎஸ்ஆர்டிசி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிரி கூறும்போது, “உச்ச நீதிமன்றத்தின் கருத்துகளை மாநில அரசிடம் எடுத்துச் சொல்வேன். உடனடியாக இந்த வழக்கை வாபஸ் பெறுகிறேன். இந்த வழக்கு விசாரணை தொடர்பாக கனம் நீதிபதி தெரிவித்த கருத்துகளை அடுத்த 5 நிமிடங்களில் செய்தி ஊடகங்கள் நாடு முழுவதும் எடுத்துச் செல்லும். இது கேரள அரசின் காதுகளுக்கும் எட்டும்” என்றார்.
– பிடிஐ