உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், சமாஜ்வாடி தலைமையிலான கூட்டணிக்கு, 51.5 சதவீத தபால் வாக்குகள் கிடைத்துள்ளதாக, அக்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில், மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, கடந்த பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி முதல், கடந்த 7 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. நாட்டிலேயே அதிக சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மாநிலம் உத்தர பிரதேச மாநிலத்தில், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில், ஆளும் பாஜகவும், சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 10 ஆம் தேதி எண்ணப்பட்டன. அதன்படி, ஆளும் பாஜக 276 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 322 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், இந்தத் தேர்தலில் 276 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
அதே சமயம், முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி, 122-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. கடந்த தேர்தலில் வெறும் 42 தொகுதிகளை மட்டுமே வென்ற சமாஜ்வாடி, இந்தத் தேர்தலில் மூன்று இலக்கங்களில் வெற்றி பெற்றுள்ளது அக்கட்சியின் எழுச்சியை காட்டுகிறது. பாஜக மீண்டும் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து முதலமைச்சாக இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்க உள்ளார்.
இந்நிலையில், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சமூக வலைதளமான ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து உள்ளதாவது:
சமாஜ்வாடி தலைமையிலான கூட்டணிக்கு, 51.5 சதவீத தபால் வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில், 304 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். தேர்தலில் சமாஜ்வாதி தலைமையிலான கூட்டணியின் வெற்றி குறித்த உண்மையை இது தெளிவாகக் காட்டுகிறது. தபால் மூலம் வாக்களித்த ஒவ்வொரு அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.