நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதால், சோர்ந்து கிடக்கும் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் விதமாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு விழாவில் களம் அமைக்க உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
5 மாநிலத் தேர்தலில், உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தரக்காண்ட் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது. இந்த 5 மாநிலத் தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
இந்த சூழலில் டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுகவின் தேசிய அலுவலகம் திறப்பு விழா ஏப்ரல் 2-ம் தேதி திறப்பு விழா நடைபெற உள்ளது. நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில், 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. இதனால், சோர்ந்து கிடக்கும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைவதற்கான களமாக தலைநகர் டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகம் திறப்பு விழா அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர்கள் முன்னிலையில் திறந்து வைக்கிறார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பைத் தொடங்கி, சமூக நீதி திட்டங்களை எடுத்துச் செல்வதற்கான பயணத்தை திமுக தொடங்கியுள்ளதால், இந்த புதிய கட்டிடம் திமுகவின் தேசிய அலுவலகமாக செயல்படும் என்று தெரிகிறது.
மத்திய டெல்லியில் பாஜகவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள தீன தயாள் உபாத்யாய் மார்க் என்ற இடத்தில் மத்திய அரசு ஒதுக்கிய நிலத்தில் திமுக அலுவலக வளாகம் கட்டப்பட்டுள்ளது.
டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு விழா ஏப்ரல் 2ம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திறப்பு விழா பிரம்மாண்டமாக நடைபெறாது என்றாலும், திமுக அலுவலகம் திறப்பு விழாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர்களை அழைக்க முடிவு செய்துள்ளதாகவும், விழாவில் யார் பங்கேற்க உள்ளார்கள் என்ற பட்டியல் இன்னும் தயாரிக்கப்படவில்லை ஆனால், சில தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக அலுவலகம் திறப்புவிழாவுக்கான அழைப்பிதழ்கள் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அனுப்பப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரளா முதல்வர் பினராயி விஜயன், பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கல் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து, சில மாதங்களிலேயே, டெல்லியில் நடைபெறும் திமுக அலுவலகம் திறப்பு விழாவுக்கு திமுக, எதிர்க்கட்சித் தலைவர்களை அழைக்க திட்டமிட்டிருப்பது 5 மாநில தேர்தல் தோல்வியால் சோர்ந்து கிடக்கும் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் மு.க.ஸ்டாலினின் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“