TR Balu and DMK MP’s urges centre to recall Tamilnadu Governor: தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 7 மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதால் அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மக்களவையில் திமுக எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பிய நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவியில் இருந்து திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு திமுக எம்.பி டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
திங்கள்கிழமை மாலை நீட் விலக்கு மசோதா தொடர்பாக லோக்சபாவில் விவாதிக்கக் கோரி திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியது. ஒத்திவைப்பு தீர்மானம் தொடர்பாக லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் வழங்கினார். நீட் விலக்கு தொடர்பாக ஏற்கனவே கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று லோக்சபாவில் பேசிய, திமுக எம்பி டி.ஆர்.பாலு, ஆளுநருக்கு தமது அரசியல் சாசனம் அதிக அதிகாரங்களை வழங்கி உள்ளது. நாட்டில் சட்டத்தின் ஆட்சி தான் நடக்க வேண்டும். மாநில அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநரின் முக்கிய பணி என்று கூறினார்.
மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, ஏழுக்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், அவர் ஒரு மசோதாவைக் கூட குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பவில்லை. தமிழக அரசு அனுப்பிய 7 மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்துள்ளார் என்று கூறினார்.
இதையும் படியுங்கள்: பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுனரை அகற்ற சட்ட திருத்தம்: மார்க்சிஸ்ட் தீர்மானம்
உடனே, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா குறுக்கிட்டு, இந்த விவகாரம் மாநில விவகாரம் என்றும், நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கூடாது என்றும் கூறினார்.
ஆனால், டி.ஆர்.பாலு குறுக்கிட்டு, “நாம் காட்டாட்சி நடத்துகிறோமா? நாங்கள் காட்டாட்சி நடத்தவில்லை. இருப்பினும், அனைத்து மசோதாக்களும் கவர்னர் பங்களாவில் நிலுவையில் உள்ளன. தமிழக ஆளுநர் சட்டத்தை மதிக்காமல் காட்டாட்சி நடத்துகிறாரா? ஆளுநர் சட்டப்படி செயல்பட வேண்டும். சட்டசபையில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர வேண்டும் என்று பேசினார். தமிழக ஆளுநரை மாற்ற வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்றும் பேசினார்.
மக்களவையில் டி.ஆர்.பாலு பேசிய அதே நேரத்தில் கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ரவியை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மசோதாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலைப் பெற அனுப்ப அப்போது வலியுறுத்தினார்.