விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து, அதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் படுவேகமாக நடந்து வருகிறது. இன்னொரு புறம், படத்தின் இசைவெளியீடு வருகிற 20ம் தேதி நடக்கிறது என்ற தகவல்கள் வாட்ஸ் அப்பில் அனல் பறக்கின்றன.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த படம் ‘பீஸ்ட்’. பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி என பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் படத்தின் இசைவெளியீட்டுக்கான ஏற்பாடுகள் நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நடந்து வருவதாகவும், வருகிற 20 அல்லது 23ம் தேதிகளில் அதன் விழா நடக்க உள்ளதாகவும், செய்திகள் வாட்ஸ் அப்பில் வலம் வருகின்றன.

நிகழ்ச்சியில் அனிருத்தின் லைவ் கன்சர்ட்டில் படத்தின் பாடல்கள் இசைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. அதில் விஜய் வழக்கம்போல் குட்டிக்கதைகள் சொல்லி, அரசியல் பேச்சும் இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும், விழாவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த் என பல பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்றும் கோடம்பாக்கத்தில் செய்திகள் உலாவுகின்றன. இது பற்றி ‘பீஸ்ட்’ வட்டாரத்தில் விசாரித்தேன். ”ஃபங்ஷன் நடக்கப் போவதாக வாட்ஸ் அப்பில் உலாவரும் படமானது, ‘மெர்சல்’ இசைவெளியீட்டின் போது எடுத்த படமாகும். படத்தின் போஸ்ட் புரொக்டக்ஷன் வேலைகள் இன்னமும் நடந்து வருகின்றன. ஃபைனல் ரெடி செய்து கொடுக்கவே இம்மாத கடைசி ஆகிவிடும் எனவே யூனிட் முழுவதும் பட வேலைகளில் பிஸியாக உள்ளனர். ஆகவே, இசைவெளியீடு நடத்தும் ஐடியா தற்போதைக்கு இல்லை. ஃபங்ஷன் இருக்காது.” என மறுத்துள்ளனர்.