“எனக்குப் பல வருடங்களாக எக்ஸிமா எனும் சரும பாதிப்பு இருக்கிறது. சருமத்தில் சொறிசொறியாக இருக்கிறது. தோல் உரிகிறது. சிகிச்சை எடுத்தும் முற்றிலும் சரியாகவில்லை. இதை முழுமையாக குணப்படுத்த முடியுமா?”
– முருகன் (இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.
“அரிப்புடன் கூடிய தோல் அழற்சியையே எக்ஸிமா என்கிறோம். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு சருமப்பகுதிகள் வீங்கும். அரிக்கும். சிவந்தும் தடித்தும் போகும். பிறகு சொறியாக மாறும். கடைசியாக தோல் உரியத் தொடங்கும். சிலருக்கு பாதிப்பின் தீவிரம் அதிகமானதன் காரணமாக அந்த இடத்திலிருந்து நீர் வடியத் தொடங்கும்.
எக்ஸிமாவுக்கான காரணங்களை எக்ஸோஜீனஸ் எனப்படுகிற வெளிக் காரணிகள், எண்டோஜீனஸ் எனப்படுகிற உள் காரணிகள் என இரண்டாக வகைப்படுத்தலாம். எதிர்ப்புசக்தி இல்லாதது, பரம்பரைத்தன்மை போன்றவை உள் காரணிகள்.
சோப், டிடெர்ஜென்ட், ஷாம்பு, பூச்சிக்கொல்லிகள், அசைவம், சில வகைக் காய்கறிகள் மற்றும் பழங்களால் ஏற்படும் ஒவ்வாமை. சிமென்ட், மகரந்தம் போன்றவற்றால் ஏற்படும் ஒவ்வாமை, ஸ்டாஃபைலோகாக்கஸ் பாக்டீரியா, சிலவகை வைரஸ் மற்றும் பூஞ்சையால் ஏற்படும் இன்ஃபெக்ஷன், மெட்டல் அலர்ஜி, உணவு ஒவ்வாமை, அதீத குளிர் அல்லது அதிக வெப்பம், ஸ்ட்ரெஸ் என வெளிக்காரணிகளில் பல விஷயங்கள் இருக்கலாம்.
எக்ஸிமாவின் தீவிரத்தைப் பொறுத்து அதை அக்யூட், சப்அக்யூட் மற்றும் க்ரானிக் என மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம்.
வீக்கம் சிவந்து போவது, நீர்க்கசிவு போன்றவை அக்யூட் நிலை. பல வருடங்களாகத் தொடர்வது க்ரானிக் நிலை. அரிப்பு, சொறியும்போது சருமம் தடித்துப் போவது, சருமம் கருத்துப்போவது, சருமம் வறண்டு போவது போன்றவை இதன் அறிகுறிகள். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையான சப் அக்யூட் நிலையில் செதில்கள் உதிர்வதும் சருமத்தின் மேற்பரப்பில் ஓடுபோல் உருவாவதும் இருக்கும்.
நீங்கள் உங்கள் பிரச்னையின் தீவிரத்தின் தன்மை அறிந்து சிகிச்சை எடுக்க வேண்டும். சரும மருத்துவரை அணுகி, அலர்ஜியை கண்டறியும் டெஸ்ட் மேற்கொள்ள வேண்டும். தீவிரத்தைப் பொறுத்து மருத்துவர் உங்களுக்கு ஆயின்மென்ட், ஆன்டிபயாட்டிக் மருந்துகள், மேல்பூச்சுக்கான க்ரீம்கள், அரிப்பைத் தடுக்கும் சிகிச்சைகள் போன்றவற்றைப் பரிந்துரைப்பார். பாதிப்பைத் தூண்டும் காரணிகளை அறிந்து அவற்றைத் தவிர்க்கும் வழிகளையும் மேற்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருள்களை உபயோகிப்பதைத் தவிர்ப்பது, உணவுகளைத் தவிர்ப்பது போன்றவை.”
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?