இந்தியாவைச் சேர்ந்த செய்தியாளர்களின் கூட்டமைப்பு
Reporters’ Collective
(TRC) இலாப நோக்கமற்று செயல்படும் ஒரு ஊடக அமைப்பாகும். டிஆர்சியும் விளம்பரப் பார்வை ad.watch எனும் நிறுவனமும் இணைந்து ஃபேஸ்புக்கில் வெளிவந்த அரசியல் விளம்பரங்கள் குறித்து ஆய்வு செய்து பல உண்மைகளை வெளிக் கொண்டுவந்திருக்கின்றன. இதை அல்ஜசீரா இணைய தளம் தொடராக வெளியிட்டுவருகிறது. அரசியல் அரங்கில் அதிர்வை ஏற்படுத்திவருகிறது இந்த விளம்பர ஊழல்.
10 தேர்தல்களில் நடந்த விளம்பர ஊழல்
ஆய்வுக்குரிய காலம் பிப்ரவரி 2019முதல் நவம்பர் 2020வரை. இது ஃபேஸ்புக்கின் மெட்டா நிறுவனம் வெளிப்படைத் தன்மைக்காக வழங்கியிருக்கும் கருவியான விளம்பர நூலகப் பயன்பாட்டு நிரலாக்கம் – Ad Library’s Application Programming Interface (API) – துணை கொண்டு தரவுகளை சேகரித்து செய்யப்பட்ட ஆய்வு. ஆய்வின் காலமான 22 மாதங்களில் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தில்லி, ஒடிசா, பீகார், ஹரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பத்து மாநிலத் தேர்தல்கள் நடந்திருக்கின்றன.
பாஜகவின் தேர்தல் பிரச்சாரங்களுக்காக இரகசியமாகவம், பினாமியாவும் நிதியளிக்க ஏராளமான விளம்பரதாரர்களை ஃபேஸ்புக் அனுமதித்துள்ளது இந்த ஆய்வில் தெரியவருகிறது. பாஜகவும் அதன் வேட்பாளர்களும் அதிகாரப்பூர்வமாக 26,291 விளம்பரங்களை 10 கோடியே 4 லட்ச ரூபாய் செலவில் பேஸ்புக்கில் வெளியிட்டிருக்கின்றனர். இவ்விளம்பரங்கள் 1.36 பில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளன.
பினாமிகளின் பெயரில் பாஜக விளம்பரங்கள்
இவையன்றி குறைந்தபட்சம் 23 இரகசிய மற்றும் பினாமி விளம்பரதாரர்கள் பாஜகவிற்கு ஆதரவாக 34,884 விளம்பரங்களை வெளியிட்டனர். இதற்காக 5 கோடியே 83 இலட்ச ரூபாயை அவர்கள் ஃபேஸ்புக்கிற்கு கொடுத்துள்ளனர். இந்த பினாமி நிறுவனங்கள் எவையும் தமது அடையாளங்களையோ அல்லது தமக்கும் பாஜகவிற்கும் உள்ள தொடர்பையோ வெளியிடவில்லை. இவர்களது விளம்பரங்களில் பாஜகவை போற்றிப் பாடியும் பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் – தலைவர்களை இழிவுபடுத்தியும், முஸ்லீம் வெறுப்புணர்வு மற்றும் போலிச் செய்தி வீடியோக்கள் வெளியிடப்பட்டன. இந்த வீடியோக்கள் 1.31 பில்லியன் பார்வைகளைப் பெற்றன.
இதற்கு மாறாக காங்கிரஸ் சார்பில் 6 கோடியே 44 லட்ச ரூபாயில் அதிகாரப்பூர்வமாக விளம்பரங்கள் ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டன. இரண்டு மறைமுக மற்றும் பினாமி நிறுவனங்கள் மட்டுமே 70 லட்ச ரூபாயில் காங்கிரசுக்கு ஆதரவாக விளம்பரங்கள் வெளியிட்டன.
பினாமி விளம்பரங்கள் சட்டப்படி தவறு
இரகசிய பினாமி விளம்பரதாரர்கள் பாஜகவிற்கு அதிகமாகவும் காங்கிரசுக்கு குறைவாகவும் இருப்பது ஏன்? 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இத்தகைய அடையாளமற்ற விளம்பரதாரர்களை நீக்குவதற்கு ஃபேஸ்புக் பெரிய இயக்கமே எடுத்தது. அப்போது காங்கிரசின் ஐ.டி செல் சார்ந்த 687 பக்கங்கள் நீக்கப்பட்டன. இவை காங்கிரசுக்கு ஆதரவாக இருந்தாலும் அடையாளம் இல்லை என்று நீக்கப்பட்டன. ஆனால் இதே போல பாஜகவிற்கு அடையாளமற்ற பக்கங்கள் 14 மட்டும்தான் நீக்கப்பட்டன. ஏன் இந்தப் பாரபட்சம்?
கோப்புப்படம்
டிஆர்சியின் ஓராண்டு கால விசாரணையில் பயனர்களைச் சென்றடைவதற்கு ஃபேஸ்புக் காங்கிரஸ் கட்சிக்குத் தடை விதித்திருப்பதும் ஆளும் கட்சியான பாஜகவை, ஊக்குவித்திருப்பதும் தெரியவருகிறது.
இந்தியச் சட்டம் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் பினாமி பெயரில் வரும் விளம்பரங்களைத் தடை செய்கிறது. ஊடகங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தத் தடை. இதன் மூலம் இரகசியமான முறையில் பணம் செலவிடப்படுவதையும், வேட்பாளர்கள் தமது தேர்தல் செலவுகளை ஒதுக்கப்பட்ட வரம்பிற்குள் செய்வதை உறுதிப்படுத்தவுமே இந்தச் சட்ட வரம்புகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இங்கே அது அப்பட்டமாக மீறப்பட்டிருக்கிறது.
தேர்தல் ஆணையம் – பாஜக – பேஸ்புக் கூட்டணி
இந்த விதிமுறையை தேர்தல் ஆணையம் அறிந்திருந்தும் வேண்டுமென்றே சமூக ஊடகங்களுக்கு அமல்படுத்தவில்லை. இணையம் மற்றும் இந்திய செல்பேசி சங்கத்தின் the Internet and Mobile Association of India (IAMAI) மூலம் ஃபேஸ்புக் நிறுவனம், இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகி மேற்கண்ட விதிமுறைகள் தனக்கு அமலாகாதவாறு பார்த்துக்கொண்டது. இதை ஃபேஸ்புக்கின் விசில் ப்ளோயரான பிரான்சிஸ் ஹாகன் வெளியிட்ட ஆவணங்கள் ஆதாரத்துடன் காட்டுகின்றன. இதன் மூலம் ஃபேஸ்புக்கில் இரகசிய பினாமி விளம்பரங்கள் பாஜகவிற்கு ஆதரவாக மழை போல பொழிந்தன.
தேர்தல் ஆணையம்
நாங்கள் விதிமுறைப்படிதான் நடக்கிறோம் என்று ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா இந்தக் குற்றச்சாட்டிற்குப் பொதுவாக பதில் சொல்லியிருக்கிறது. குறிப்பான குற்றச்சாட்டுகள், ஆதாரங்களை அது மறுக்கவில்லை. இந்தியத் தேர்தல் ஆணையமோ பதிலே சொல்லவில்லை. பாஜகவின் தலைமை செய்தித் தொடர்பாளர் அனில் பாலுனியும் ஐடி மற்றும் சமூக ஊடகப் பிரிவின் தலைவரான அமித் மாள்வியாவும் பல முறை கேள்வி கேட்டு நினைவுபடுத்தியும் பதில் ஏதும் சொல்லவில்லை. இது தேர்தல் ஆணையமும் பேஸ்புக்கும் பாஜகவும் இணைந்து செயல்பட்டிருப்பதை அப்பட்டமாக காட்டுகிறது.
பாஜகவிற்காக மாற்றப்பட்ட ஃபேஸ்புக் விதிகள்
டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்ற அமெரிக்கத் தேர்தலில் பேஸ்புக்கின் பங்கு அதாவது பினாமி விளம்பரங்களில் வெளியிடப்பட்ட பொய்ச் செய்தி வீடியோக்கள் முக்கியக் காரணம் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு தனது விதிமுறைகளை வலுவாக மாற்றி இனி பினாமி விளம்பரங்களை வெளியிட மாட்டோமென ஃபேஸ்புக் கூறியது. ஆனால் இந்தியத் தேர்தலில் இந்த வெளிப்படைத் தன்மை செயல்படவே இல்லை. குறிப்பிட்ட பினாமி விளம்பரதாரர்களை அது அனுமதித்தது. இத்தகைய பாஜக பினாமிகள் அளித்திருந்த இணைய தளமோ, அவர்களைப் பற்றிய விவரமோ எதுவம் எங்கும் இல்லை.
கோப்புப்படம்
23 விளம்பரதாரர்கள் தமக்கும் பாஜகவிற்கும் உள்ள தொடர்பை வெளியிடவில்லை என்றாலும் அவற்றில் ஆறு பேர் பாஜகவின் தலைமை முகவரியைக் கொடுத்திருக்கின்றனர். அவை myfirstvoteformodi.com, Nation with Namo, NationWithNamo.com, and Bharat Ke Man ki Baat. இவை நான்கு மட்டும் 3 கோடியே 24 இலட்ச ரூபாயில் 12,328 விளம்பர வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.
கடந்த காலத்தில் பாஜகவிற்கு வேலை பார்த்த ப்ளூகிராப் டிஜிட்டல் நிறுவனம் இந்தத் தேர்தல்களில் தானே முன்வந்து பாஜகவிறகு ஆதரவாக வீடியோக்களை விளம்பரங்களாக வெளியிட்டது. ஸ்ரீனிவாசன் ஸ்ரீகுட்டன் எனும் விளம்பரதாரர் பாஜகவிற்கு ஆதரவாக விளம்பர வீடியோக்களை வெளியிட்டதோடு, வலதுசாரி அபிநவ் காரேவின் ஃபேஸ்புக் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். இந்த அபிநவ் காரே என்பவர் ஏசியா நெட் நியூஸ் நெட்வொர்க் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி என்பதோடு இவரது ஜூபிட்டர் கேப்பிட்டல் நிறுவனத்திற்கு புரவலராக இருப்பவர் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர்.
பாஜகவிற்காகக் களமிறங்கிய ரிலையன்ஸ்
பாஜகவிற்கு ஆதரவாகவும் முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வைத் தூண்டும் விதமாகவும் விளம்பர வீடியோக்களை
NEWJ
நியூஜே எனும் நிறுவனம் வெளியிட்டிருந்தது. இதன் நிறுவனர் ஷலப் உபாத்யாயா என்பவர் ரிலையன்ஸ் குழுமம் மற்றும் பாஜகவிற்கு நெருக்கமானவர். இவர் இதற்கு முன்பு ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஊடகச் செயலாளராகவும், ரிலையன்சின் நியூஸ் 18 ஊடகக் குழுமத்தின் தலைவராகவும் செயல்பட்டவர். இவரது நெருங்கிய உறவினர் சதீஷ் உபாத்யாயா தில்லியின் பாஜக தலைவராக முன்பு செயல்பட்டவர்.
நியூஜே நிறுவனத்தின் 75% பங்குகளை வாங்கிய ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனம் அதற்கு கடனாக பல கோடி ரூபாயை, கடன் பத்திரங்கள் மூலம் வழங்கியது. பின்னர் நியூஜே நிறுவனம் ரிலையன்சின் ஜியோ நிறுவனத்தின் கீழ் வருகிறது. நியூஜே நிறுவனம் பல கோடி ரூபாயில் விளம்பர வீடியோக்களை ஃபேஸ்புக்கிலும் யூடியூபிலும் வெளியிட்டிருக்கின்றது.
பொய்ச்செய்தி வீடியோக்களை வெளியிட்ட ரிலையன்ஸ்
அதில் மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டு இன்றுவரை வழக்கை சந்தித்து வரும் பிரக்யா சிங் தாக்கூர் 2019 தேர்தலில் வெற்றி பெற்று பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினராக மாறினார். இவரைப் பற்றிய வீடியோவில் இவர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார், மாலேகன் குண்டு வெடிப்பு வழக்கு ஒரு சதி வழக்கு என்று நியூஜே வீடியோ வெளியிட்டது.
பிரதமர் மோடி
அதே போன்று பொதுக்கூட்டம் ஒன்றில் ராகுல் காந்தி பேசும்போது பாஜக அரசு, பயங்கரவாதத்தை மென்மையாக கையாள்கிறது என்று பேசினார். அதற்கு ஆதரமாக வாஜ்பாய் ஆட்சியில் விடுவிக்கப்பட்ட மசூத் ஆசார் எனும் பாக் தீவிரவாதியை நக்கலாக ஆசார்ஜி என்று கூறினார். இந்த வீடியோவை வெட்டித் திரித்து ராகுல் காந்தி பாக் ஆதரவு பயங்கரவாதியை ஜி என்று அழைக்கிறார் என்று நியுஜே விளம்பர வீடியோ வெளியிட்டது.
அதே போன்று இந்தியாவில் சிஏஏ போராட்டங்கள் நடைபெற்றதைக் குறிப்பிட்டு வங்கதேசத்தில் இந்துக்கள் எப்படி தாக்கப்படுகிறார்கள் என்பதை ஒரு வீடியோவாக வெளியிட்டது.
பாஜகவின் இந்த விளம்ப வீடியோக்கள் அனைத்தும் அனைவரையும் சென்றடையும் வண்ணம் குறிச்சொற்கள் போட்டு வெளியிடப்பட்டன. அரசியல் அல்லாத செய்திகள், அரிய தகவல் செய்திகள், இந்தியாவின் வரலாறு, கலாச்சார,வைரல் வீடியோக்கள் போன்ற தலைப்புகளில் இந்த வீடியோக்கள் கொண்டு செல்லப்பட்டன. ஆகவே பல பில்லியன் பார்வைகளை இந்த பொய்ச்செய்தி வீடியோக்கள் பெற்றன.
இந்தியத் தேர்தல் ஆணையமும் பாஜகவும், ஃபேஸ்புக்கும் இணைந்து நடத்தியவைதான் சென்ற நாடாளுமன்றத் தேர்தலும் அதற்குப் பின்னர் நடந்த சட்டமன்ற தேர்தல்களும் என்பதை இந்த் ஊழல் அப்பட்டமாகக் காட்டுகிறது.
இதற்காக
அல்ஜசிரா
இணைய தளம் இந்தியாவில் தடை செய்யப்பட்டாலும் ஆச்சரியமில்லை. ஆனால் வெளிப்படையாக நடக்கும் இந்த அத்துமீறலை ஜனநாயகத்தின் மீது அக்கறையுள்ளோர் தட்டிக் கேட்கவில்லை என்றால் விரைவில் இந்தியா ஒரு சர்வாதிகார நாடாக மாறிவிடும்.