நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. கட்சியின் இந்த தோல்விக்குப் பொறுப்பேற்று 5 மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நேற்றைய தினம் அந்தக் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டரில், “ஜனநாயகத்திற்கு மிக மோசமானது.” என்று அல் ஜசீரா, தி ரிப்போர்ட்டர்ஸ் ஆகிய செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்தியை சுட்டிக்காட்டி பதிவிட்டிருந்தார். அதில், “தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், பா.ஜ.க-வுக்குச் சலுகை விலை அளித்து ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் ஆதரவாகச் செயல்பட்டுள்ளன” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
முன்னதாக மக்களவையில் இன்று பேசிய சோனியா காந்தி, “ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகப் பெரு நிறுவனங்களோடு ஆளுங்கட்சி இணைந்து செயல்படுகிறது. இதனால் ஃபேஸ்புக் மூலம் மக்கள் மனதில் வெறுப்பை விதைக்கின்றனர்” என்றார்.