மக்களவையில் பூஜ்ய நேரத்தில் அல் ஜசீரா மற்றும் தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் ஆகியவற்றில் வெளியிடப்பட்ட அறிக்கையைக் குறிப்பிட்டுப் பேசிய சோனியா காந்தி, “ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடக பெரு நிறுவனங்களோடு ஆளும் கட்சி இணைந்து செயல்படுகின்றது. இதனால் ஃபேஸ்புக் மூலம் மக்கள் மனதில் வெறுப்பை விதைக்கின்றனர். ஃபேஸ்புக் நிறுவனத்துக்கும் இது தெரியும். அதைப் பயன்படுத்தி ஃபேஸ்புக் லாபம் பார்க்கிறது. மற்ற அரசியல் கட்சிகளுடன் ஒப்பிடும்போது, பா.ஜ.க-வின் தேர்தல் விளம்பரங்களுக்கு ஃபேஸ்புக் சலுகைகளை வழங்கியிருக்கிறது .
அரசோடு இணைந்து சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் ஃபேஸ்புக்கின் செயல்பாடு ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. இது கட்சிகளுக்கும், அரசியலுக்கும் அப்பாற்பட்டது. யார் ஆட்சியிலிருந்தாலும் நமது ஜனநாயகத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டும்” என்றார்.