திஸ்பூர்: “அசாம் மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 35 சதவீதம் இருக்கிறார்கள். எனவே, அவர்கள் சிறுபான்மையினராக இருக்க முடியாது“ என்று அம்மாநில முதல்வர் சர்மா தெரிவித்துள்ளார்.
அம்மாநில சட்டப்பேரவையின் கூட்டத் தொடரில், ஆளுநரின் உரை மீதான விவாதத்திற்கு முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பதிலளித்துப் பேசினார். அப்போது அவர், “இன்று முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்கட்சித் தலைவர்கள், எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள்; சம வாய்ப்பு மற்றும் அதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள். இங்கு பழங்குடி இன மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும், அவர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் கடமை நமக்கு இருக்கிறது.
பழங்குடியினர் வசித்து வரும் ஆறாவது அட்டவணைப் பகுதியில் உள்ள நிலங்களை ஆக்கிரமிக்க வேண்டியத் தேவை இல்லை. போராக்களும், கலிதாக்களும் அங்கு குடி ஏறவில்லை என்றால், இஸ்லாமும், ரகுமானும் அந்த நிலத்தில் குடியேறுவதைத் தவிர்க்க வேண்டும். ஆயிரம் பேருக்காக, 10,000 பிகாஸ் (2,500 ஏக்கர்) நிலத்தை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது. சில முதலாளிகளின் தனிப்பட்ட ஆதாயத்திற்காக வனப்பகுதிகள் அழிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
அதிகாரம் பொறுப்புடன் இணைந்தே வருகிறது. அசாமின் மக்கள் தொகையில் 35 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர். இங்குள்ள சிறுபான்மையினரை பாதுகாப்பது அவர்களின் கடமையாகும். அசாம் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அவர்களின் பண்பாடு, கலாசாரம் பாதுகாக்கப்படுமா என்ற அச்சம் அவர்களிடம் உள்ளது. இணக்கம் என்பது இருவழிப்பதையை உடையது. முஸ்லிம் மக்கள் சங்கரி கலாசாரத்தை, சத்திரியா கலாசாரத்தை பாதுகாப்பது பற்றி பேசத் தொடங்கட்டும், இணக்கம் உருவாகும்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் சிறுபான்மையினராக இல்லை. இன்று சிறுபான்மையினராக இருக்கிறோம். என்னைச் சந்திக்கும் மக்கள் எல்லோரும், காஷ்மீர் பண்டிட்களின் நிலைமை தங்களுக்கும் ஏற்படுமா என்று கேட்கின்றனர். இன்னும் பத்து ஆண்டுகளில் பாலிவுட் படமான ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தில் காட்டப்படுவது போல அசாம் மாறிவிடும். எங்களுடைய பயத்தைப் போக்குவது முஸ்லிம்களின் கடமை. அவர்கள் பெரும்பான்மை மக்களைப் போல நடந்து கொள்ளவேண்டும், காஷ்மீர் நிலை இங்கு ஏற்படாது என்று உறுதியளிக்கவும் வேண்டும்.
பூர்விக முஸ்லிம்கள் கூட உங்களைப் பார்த்து பயப்படுகிறார்கள். அதனாலேயே அவர்கள் ஹிமந்தாவை விரும்புகிறார்கள்.
கிரிமினல் கும்பல்களை ஒடுக்குவது நடுநிலையான செயல். அதற்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை. மாநிலத்தில் கட்டப்படும் 7 லட்சம் வீடுகளில் பெரும்பான்மையான வீடுகள் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும். பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டத்தின் பயனாளிகளில் பெரும் பகுதியினர் முஸ்லிம் பெண்களே.
தமிழகத்தின் நெய்வேலி மின்நிலையத்தில் இருந்து 350 மெகாவாட் மின்சாரம் பெற திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, சோலார் திட்டத்தின் மூலம் அசாம் 1000 மெகாவாட் மின்சாரம் பெற விரும்புவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனுடன் தெரிவித்தேன். இங்கு அது சாத்தியப்படாமல் போகலாம். அதேபோலா பால்மோரிலும் அமைக்க முயற்சி செய்யவேண்டும்” என்று தெரிவித்தார்.
அசாமின் மொத்த முஸ்லிம் மக்கள் தொகையில், சுமார் 4 சதவீதத்தினர் பூர்விக முஸ்லிம்கள், பெரும்பாலானவர்கள் வங்க மொழி பேசும் முஸ்லிம்கள் என்பது குறிப்பித்தக்கது.