கரோனா வைரஸ் திரிபுகளிலேயே ஒமிக்ரான் அதிகம் பரவல் தன்மை கொண்டது. இதில், தற்போது ஏற்பட்டுள்ள உருமாற்றம் இன்னும் அதிவேகமாக பரவக்கூடியது எனத் தெரிகிறது. BA.2 என்ற இந்த திரிபு பெரும்பாலான நாடுகளிலும் முந்தைய ஒமிக்ரான் திரிபிற்கு மாற்றாகப் பரவத் தொடங்கியுள்ளது. இந்த ‘ஸ்டெல்த் ஒமிக்ரான்’ குறித்து தெளிவாகப் பார்ப்போம்.
கரோனா என்ற புதிய வைரஸ் கடந்த 2019 இறுதியில் சீனாவில் தோன்றி உலகின் பல நாடுகளுக்கும் பரவியது. கரோனா பெருந்தொற்றால் உலகில் 46 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், 60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சீனா உள்ளூர் அளவிலான கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இது கடந்த 2 ஆண்டுகளாக சீனாவை வெளி உலகில் இருந்து கிட்டத்தட்ட துண்டித்துவிட்டது. இந்நிலையில், சீனாவில் தற்போது எளிதில் பரவக் கூடிய ஒமிக்ரான் வகை கரோனா வைரஸ் பரவி வருகிறது.
சீனா முழுவதும் 13 நகரங்களில் முழுமையாகவும், பல நகரங்களில் பகுதி அளவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் வடகிழக்கில் உள்ள ஜிலின் மாகாணம் ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் அண்டை நாடான தென் கொரியாவிலும் ஒமிக்ரான் வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்நாட்டில் புதிதாக 3,62,283 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. இங்கு கடந்த 7 நாட்களில் சராசரியாக 3,37,000 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் திடீரென நோய்த் தொற்று அதிகரிக்க ஸ்டெல்த் ஓமிக்ரான் திரிபே காரணம் எனக் கூறப்படுகிறது.
ஸ்டெல்த் ஒமிக்ரான் என்றால் என்ன? – கரோனா வைரஸ் திரிபுகளிலேயே ஒமிக்ரான் அதிகம் பரவல் தன்மை கொண்டது. இந்நிலையில், இதில் தற்போது ஏற்பட்டுள்ள உருமாற்றம் இன்னும் அதிவேகமாக பரவக் கூடியது எனத் தெரிகிறது. BA.2 என்ற இந்த திரிபு பெரும்பாலான நாடுகளிலும் முந்தைய ஒமிக்ரான் திரிபிற்கு மாற்றாகப் பரவத் தொடங்கியுள்ளது. ஆனால், இதுவரை உலக சுகாதார அமைப்பு இதனை ’வேரியன்ட் ஆஃப் கன்சர்ன்’ எனப்படும் கவலை கொள்ளத்தக்க திரிபாக அறிவிக்கவில்லை. டென்மார்க்கில், இப்போதைக்கு BA.2 என்ற ஸ்டெல்த் ஒமிக்ரான் தான் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது.
BA.2 என்பது முந்தைய BA.1 திரிபின் வழித்தோன்றல் திரிபாக கருதாமல், அதன் சகோதர திரிபு என்றே கருத வேண்டும் என்று ஸ்விட்சர்லாந்தில் பயோசென்ட்ரம் பல்கலைக்கழகத்தில் பயோஇன்ஃபோமேட்டிசியனான ரோமர் தெரிவித்துள்ளார்.
BA.2 திரிபு, வழக்கமாக கரோனா வைரஸ் திரிபுகள் அவற்றின் ஸ்பைக் புரதத்தில் மரபணு மாற்றத்தை செய்வது போல் செய்யவில்லை. இதனால், ஆர்டி பிசிஆர் பரிசோதனைகளில் இதனைக் கண்டறிவதில் சிக்கல் உள்ளது. அதனாலேயே, இது ஸ்டெல்த் ஒமிக்ரான் என்று கூறப்படுகிறது. மேலும், இது கரோனா வைரஸின் முதல் திரிபான, உலக சுகாதார அமைப்பால் கவலைக்குரிய திரிபாக அறிவிக்கப்பட்ட ஆல்ஃபா வைரஸை ஒத்த சில தன்மைகளைக் கொண்டிருக்கிறது என்றும், இதுவரை எந்த திரிபிலும் இல்லாத புதிதாக 28 தன்மைகளையும் கொண்டுள்ளது எனவும் இஸ்ரேல் சென்ட்ரல் வைராலஜி லேபாராட்டரி தெரிவித்துள்ளது. இன்னும் சில முதற்கட்ட ஆய்வுகள், BA.2 திரிபு, தடுப்பூசி ஆற்றலைத் தாண்டி பரவக் கூடியது எனக் கூறுகின்றன. இதன் போக்கை அறிய இன்னும் 3 முதல் 4 வாரங்கள் ஆகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ரிஸ்க் என்ன? – சீனாவில் அதிவேகமாகப் பரவிவரும் BA.2 ஒமிக்ரான் திரிபு உலக நாடுகளை மீண்டும் அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ளது. ஏற்கெனவே பல்வேறு நாடுகளும் 4 அலைகள் வரை கரோனா தொற்றை எதிர்கொண்டுவிட்ட நிலையில், புதிதாக ஸ்டெல்த் ஒமிக்ரான் அதிவேகமாகப் பரவுவது மீண்டும் சுகாதாரத் துறை மீது அழுத்ததை சேர்க்கும் என உலக நாடுகள் அஞ்சுகின்றன.
இந்தியாவில் 4-வது அலை ஏற்படும் என்பதை இப்போதே கணிக்க முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஐஐடி கான்பூர் முன்பு வெளியிட்ட அறிக்கையில். இந்தியாவில் ஜூன் மாதம் அடுத்த அலை ஏற்படலாம் என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், உலக சுகாதார நிறுவனமும் ஒமிக்ரான் தான் கடைசி திரிபு என்று கூறமுடியாது, அடுத்தடுத்த திரிபுகள் வரலாம்; அது இன்னும் அதிகம் பரவும் தன்மை கொண்டதாகவும் இருக்கலாம் என்று கணித்திருந்தது கவனிக்கத்தக்கது ஆகும்.