சீனாவில் ஓமிக்ரான் வகை தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அதிகரிக்கும் நோய் தொற்றினால் ஊரடங்கும், தொற்று நோய் பரிசோதனைகளும் அங்கு அதிகரித்துள்ளன.
நோய் பரவலைக் கட்டுப்படுத்த சீனாவில் குறைந்தது 13 நகரங்களில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மற்ற பல நகரங்கள் பகுதியளவு ஊரடங்கைக் கடைப்பிடித்துவருகின்றன.
இதில் வடகிழக்கு மாகாணமான ஜிலின் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கே செவ்வாயன்று கிட்டதட்ட 3,000-க்கும் மேற்பட்ட புதிய நோய்த்தொற்று எண்ணிக்கை பதிவாகி உள்ளது என்று தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
9 மில்லியன் மக்கள் வசிக்கும் மாகாண தலைநகரான சாங்சுன் உட்பட பல நகரங்களில் வசிப்பவர்களுக்கு, வீட்டிலேயே தங்கும்படி அறிவுறுத்தி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
17.5 மில்லியன் மக்கள் வசிக்கும் தெற்கு தொழில்நுட்ப மையமான ஷென்செனில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. சீனாவின் மிகப்பெரிய நகரமான ஷாங்காய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் கீழ் காண்காணிக்கப்படுகிறது.