ஐந்து மாநில தேர்தல் தோல்வி தொடர்பாக அதிருப்தி காங்கிரஸ் தலைவர்கள் நடத்தி வரும் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் சசி தரூரும் பங்கேற்றுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அண்மையில் வெளியாகின. இதில் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த தேர்தல் தோல்வி குறித்து விவாதிப்பதற்காக சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. எனினும், இதில் முக்கிய முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து, கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் 23 காங்கிரஸ் தலைவர்களின் (ஜி 23) ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் இல்லத்தில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூரும் பங்கேற்றார். காங்கிரஸ் தலைமை குறித்து பல மூத்த நிர்வாகிகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வந்த போதிலும், சசி தரூர் அதிலிருந்து ஒதுங்கியே இருந்தார். தற்போது அவரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே, கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் சசி தரூர் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், “நான் இதுவரை செய்த தவறுகளில் இருந்து பல பாடங்களை கற்றிருக்கிறேன். இப்போது மேலும் சில தவறுகள் செய்வதை பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM