75 சதவிகித அமேசான் மழைக்காடுகள் வறட்சி, காட்டுத்தீ மற்றும் பிற மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தானாகவே மீளும் திறனை இழந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறது புதிய ஆய்வு.
‘Nature Climate Change’ இதழில் வெளியாகியிருக்கும் புதிய ஆய்வுக் கட்டுரையின்படி, அமேசான் மழைக்காட்டில் முக்கால்வாசி, அதாவது 75% பகுதிகள் ‘Tipping Point’-ஐ எட்டிவிட்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஒரு காடு அதன் இயல்பு நிலைக்கு இயற்கையாகவே திரும்பும் திறனை இழக்கும் புள்ளியையே ‘Tipping Point’ என்கிறார்கள். இதனால் ‘உலகின் நுரையீரல்’ என அழைக்கப்படும் பரந்து விரிந்த அமேசான் மழைக்காடுகள் அடுத்த சில வருடங்களிலேயே வறண்ட புல்வெளியாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது இந்த ஆய்வு.
விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக பல்வேறு முறைகளில் இத்தகைய சவாலான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலே குறிப்பிட்ட இந்த ஆய்வின் சிறப்பு என்னவென்றால் வறட்சி, காட்டுத்தீ மற்றும் மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து இந்த காடுகள் எவ்வளவு விரைவாக மீள்கின்றன என்பதை அளவிட இத்தனை ஆண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட செயற்கைக்கோள் தரவுகளை இது ஆய்வுசெய்திருக்கிறது.
மொத்த உலகின் நல்வாழ்வுக்கு பெரும் பங்காற்றுகின்றன இந்த அமேசான் காடுகள். தென் அமெரிக்காவின் நீர் சுழற்சியில் முக்கிய அங்கமாக இருக்கும் இந்தக் காடுகள் பல உயிரினங்களுக்கு வீடாக இருக்கின்றன. முக்கியமாகப் பல கோடி டன் கார்பன் டை-ஆக்சைடை உட்கொள்கின்றன இந்தக் காடுகள். இந்தச் சமநிலை தவறினால் உலகம் வெப்பமயமாகி மனிதன் வாழத் தகுதி இல்லாத இடமாக மிக விரைவில் மாறிவிடும் அபாயம் உள்ளது.
இந்த ஆய்வில் காற்றின் தரத்தை மதிப்பிடுவதற்காக ‘Resilience’ (ரெசிலியன்ஸ்) என்ற காரணியை எடுத்துக்கொள்கிறார்கள். ரெசிலியன்ஸ் என்றால் சுயமாக இயல்பு நிலைக்குத் திரும்பும் திறன் என்று அர்த்தம். இதற்காக அறிவியலாளர்கள் இரண்டு வகையான தரவுகளைப் பகுப்பாய்வு செய்தனர். அதில் ஒன்று மரத்தில் இருக்கும் மொத்த நீரின் அளவு. மற்றொன்று பசுமையான தாவரங்கள் எவ்வளவு இருக்கின்றன என்பது.
20 வருடமாக செயற்கைகோள்கள் சேகரித்த இந்தத் தரவுகளை வைத்தே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதிலேயே அமேசான் காடு கடந்த இருபது வருடங்களாக அதன் ‘Resilience’-ஐ கொஞ்சம் கொஞ்சமாக இழந்து தற்போது ‘டிப்பிங் பாயின்டை’ நெருங்கிவிட்டது என்பது தெளிவாகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். மொத்தமாக ‘டிப்பிங் பாயின்டை’ தாண்டிவிட்டதா என்பதை இந்தத் தரவுகளை மட்டும் வைத்து துல்லியமாகக் கூறமுடியாது என்பதையும் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவரான நெக்லஸ் போயர்ஸ், “அமேசான் மழைக்காடுகள் பல கோடி ஆண்டுகள் பழைமையானவை. இந்த அற்புத காடுகள் பல சவால்களைச் சந்தித்துள்ளன. மாறுபட்ட காலநிலை, கடுமையான மழைப் பொழிவு, வறட்சி எனப் பல இன்னல்களைக் கடந்து வந்திருக்கிறது. ஆனால், ஒரு குறிப்பிட்ட இனத்தால் பேரழிவை இதற்கு முன்பு அவை சந்தித்ததில்லை. அதைத்தான் மனிதர்களான நாம் செய்துகொண்டிருக்கிறோம். இதில் ஒரே நம்பிக்கையான விஷயம் நாம் இன்னும் ‘டிப்பிங் பாயின்டை’ கடக்கவில்லை. அருகில்தான் இருக்கிறோம். இதனால் சேதம் ஏற்படாமல் பாதுகாக்க இன்னும் நமக்குக் கொஞ்சம் காலம் இருக்கிறது. அதற்குள் அவசரக்கால நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். முதலில் காடழிப்பை நிறுத்த வேண்டும்!” என்றார்.