ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கை தொடர்ந்த மாணவிகள் தரப்பில் மேல் முறையீட்டு மனு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் தீர்ப்பின் மீதான அதிருப்தி குறித்து வழக்கு தொடர்ந்த மாணவிகள் தற்போது பேசியுள்ளனர்.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஒரு கல்லூரிக்கு கடந்த ஜனவரி மாதம் ஹிஜாப் அணிந்து வந்த ஆறு இஸ்லாமிய பெண்களை வகுப்பறைக்குள் செல்ல விடாமல் தடுத்ததால் இந்த விவகாரம் பூதாகரமாகியது. இஸ்லாமிய பெண்களுக்கு ஆதரவாக சில பள்ளி, கல்லூரிகளில் போராட்டங்கள் நடக்க, அதற்கு போட்டியாக இந்து மாணவ, மாணவியர் காவி துண்டை அணிந்து வந்தனர். இதனால் அசாதாரண சூழல் ஏற்பட்டதை அடுத்து பள்ளி, கல்லூரிகள் சில நாட்கள் வரை மூடப்பட்டன. இந்தச் சூழலில் மத அடையாளங்களுடன் மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்லக் கூடாது என இடைக்கால உத்தரவை பிறப்பித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது.
அதன் அடிப்படையில் கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று கூடிய நிலையில், ஹிஜாப் அணிய தடை விதித்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் ரிதுராஜ் அவஸ்தி, கிருஷ்ண தீக்ஷித், காஸி அடங்கிய அமர்வு தெரிவித்தது. மத ரீதியாக ஏற்படும் பிளவுகளை தடுக்கும் வகையில் ஆடைக் கட்டுப்பாடுகளை விதிக்க கல்வி நிறுவனங்களுக்கு உரிமை இருப்பதாகவும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.
இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்திருக்கும் கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, `நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்’ எனக் கூறியுள்ளார். மேலும் மாணவர்கள் மத விவகாரங்களை ஒதுக்கிவைத்துவிட்டு கல்வியில் கவனத்தை செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதே நேரம் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மிகுந்த ஏமாற்றம் தருவதாக உள்ளது என காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெகபூபா முஃப்தி கூறியுள்ளார். காஷ்மீரின் மற்றொரு முன்னாள் முதல்வரான உமர் அப்துல்லாவும் இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக கருத்து வெளியிட்டுள்ளார்.
ஹிஜாப் விவகாரத்தில் தீர்ப்பு வெளியானதால் அசம்பாவிதங்களை தவிர்க்க, வரும் 21ஆம் தேதி வரை பெங்களூருவில் பொது இடங்களில் கூட்டம் கூடவும், கொண்டாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபடவும் காவல்துறை தடை விதித்துள்ளது. தக்ஷின் கன்னடா, ஷிவ்மோகா, கலபுர்கி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மாணவிகள் ஆறு பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். அதுகுறித்து பேசும்போது, “இந்திய அரசியலமைப்பு மிகவும் சிறந்தது, ஆனால் அது யார் ஆட்சி செய்கிறார்கள் என்பதை பொறுத்தது என்று ஒரு முறை அம்பேத்கர் கூறினார். அது இப்போது தெளிவாக தெரிகிறது. இப்போது இந்திய அரசியலமைப்பு சட்டம் முறையாக பின்பற்றப்படுவதில்லை என்பது தெரிகிறது. இதை எப்படி விளக்குவது என்றே தெரியவில்லை. இன்று மட்டும் டாக்டர் அம்பேத்கர் உயிருடன் இருந்திருந்தால், தற்போதுள்ள இந்திய அரசியலமைப்பை பார்த்து கண்ணீர் சிந்தியிருப்பார்” எனக் கூறியுள்ளனர்.
சமீபத்திய செய்தி: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யாவிற்குள் நுழைய தடைSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM