கடந்த 2014ம் ஆண்டிலிருந்து இதுவரைக்கும் காங்கிரஸ் கட்சியிலிருந்து 177 எம்பிக்கள், எம்எல்ஏக்கள், 222 வேட்பாளர்கள் கட்சி தாவியுள்ளனர். எந்த அரசியல் கட்சியிலும் இப்படி நடந்ததில்லை என்று மூத்த காங்கிரஸ் தலைவரும், “ஜி 23” என்று அழைக்கப்படும் அதிருப்தியாளர்கள் குழுவைச் சேர்ந்தவருமான
கபில் சிபல்
கூறியுள்ளார்.
5 மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது. பஞ்சாபில் ஆட்சியை இழந்துள்ளது. உ.பியில் 2 சீட்தான் கிடைத்தது. உத்தரகாண்ட், கோவா, மணிப்பூரிலும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இந்த தோல்வி தொடர்பாக தாங்கள் பதவி விலகத் தயார் என்று
சோனியா காந்தி
, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கூறி விட்டனர். ஆனால் அதை காங்கிரஸ் காரியக் கமிட்டி ஏற்கவில்லை.
இந்த நிலையில் மூத்த
காங்கிரஸ் அதிருப்தியாளர்கள்
காங்கிரஸ் தலைமையைத் தாக்கி கருத்துக்களைக் கூறி வருகின்றனர். அந்த வகையில் கபில் சிபல் சில கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். அவரது கருத்துக்களுக்கு பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் தோல்வி குறித்தும் , தலைமை மாற்றம் குறித்தும் கபில் சிபல் கூறியுள்ள கருத்துக்கள்:
இந்த தேர்தல் முடிவு எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. 2014ம் ஆண்டிலிருந்தே கட்சி வீழ்ச்சியைத்தான் கண்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலமாக இழந்து வருகிறோம். நாம் வெற்றி பெற்ற மாநிலத்தைக் கூட நம்மால் தக்க வைக்க முடியவில்லை. இடையில் பல்வேறு கட்சிகளுக்கும், காங்கிரஸ் தலைவர்கள், வேட்பாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மாறிப் போய் விட்டனர். 2014ம் ஆண்டு முதல் இதுவரை 177 எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், 222 வேட்பாளர்கள் கட்சி தாவியுள்ளனர். இந்தியாவில் எந்த அரசியல் கட்சியிலும் இப்படி நடந்ததில்லை.
ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். உண்மையில் அவர் தலைவர் போலத்தான் செயல்பட்டு வருகிறார். முக்கிய முடிவுகளை அவர்தான் எடுத்து வருகிறார். கட்சியின் சில பிரிவினர் விரும்புவது போல அவரை அதிகாரப்பூர்வமாக தலைவராக்கினாலும் கூட அது எந்த வகையிலும் மாற்றத்தைக் கொடுக்காது.
ஒரு வீட்டுக்காக காங்கிரஸ் கட்சி இருக்கக் கூடாது. மக்களுக்காக, நாட்டுக்காக, தொண்டர்களுக்காக, வளர்ச்சிக்கான காங்கிரஸாக இது இருக்க வேண்டும். இதைத்தான் நான் எப்போதும் விரும்புகிறேன். பாஜகவை விரும்பாத அனைவரையும் உள்ளடக்கியதாக இந்த காங்கிரஸ் இருக்க வேண்டும். அனைவரது கருத்துக்களையும் மதிக்க வேண்டும். அனைவரது திட்டங்களையும் உள்ளடக்க முன்வர வேண்டும். உண்மையான மாற்றம் இருக்க வேண்டும். எதேச்சதிகாரமாக எந்த முடிவும் எடுக்கப்படக் கூடாது.
காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிய மமதா பானர்ஜி, சரத் பவார் போன்றோர் மீண்டும் திரும்ப வேண்டும். ஒருங்கிணைய வேண்டும். எந்தக் கட்சியையும் சேராத கோடிக்கணக்கானோர் இந்த நாட்டில் உள்ளனர். அவர்கள் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களை கட்சி அரவணைக்க வேண்டும், கவர வேண்டும்.
தற்போது அதிகாரப்பூர்வ தலைவராக சோனியா காந்தி இருக்கிறார். ராகுல் காந்தி பஞ்சாப் சென்றார். அங்கு முதல்வர் வேட்பாளரை அறிவித்தார். எந்த தகுதியில் அவர் முதல்வர் வேட்பாளரை அறிவித்தார்?. அவர் கட்சியின் தலைவர் அல்ல. ஆனால் எல்லா முடிவுகளையும் எடுக்கிறார். அப்படி இருக்கும்போது அவரை தலைவராக்க வேண்டும் என்று சிலர் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என்றார் கபில் சிபல்.
கபில் சிபலின் இந்தப் பேச்சுக்கு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் அரிச்சுவடி கூட சிபலுக்குத் தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியின் அடிப்படை தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரம் புரியாதவர். அவருக்கு ராகுல் காந்தி குறித்துப் பேசக் கூட அருகதை இல்லை என்று சாடியுள்ளார்.
சட்டிஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் கூறுகையில், காங்கிரஸ் தலைமையைக் கேள்வி கேட்ட யாருமே நிலைத்தது இல்லை. அரசியலை விட்டே அழிந்துதான் போயுள்ளனர். இதை கபில் சிபல் புரிந்து கொள்ள வேண்டும். இது அனைவரையும் உள்ளடக்கிய கட்சி. எந்தக் குடும்பமும் இதை சொந்தம் கொண்டாடியதில்லை. அடித்தட்டு மக்களுக்கான கட்சி இது. சிலருக்கு இது பங்களாவிலும், டின்னரிலும் மட்டும் வாழ வேண்டும் என்ற சுயநல எண்ணண் உள்ளது. அவர்கள் உ.பிக்குப் போய் தலைமை எப்படியெல்லாம் போராடியது என்பதை பார்த்து விட்டு வரட்டும். காங்கிரஸ் அழிகிறது என்று சொல்பவர்கள்தான் அழியப் போகிறார்கள் என்று ஆவேசமாக கூறியுள்ளார் பாகல்.
தற்போது இந்தியாவிலேயே ராஜஸ்தான், சட்டிஸ்கர் மாநிலங்களில் மட்டும்தான் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.