இந்தா கிளம்பிட்டாங்கள்ள.. உ.பியில்.. சமாஜ்வாதி தொண்டர்கள் மீது சரமாரியாக வழக்குகள்!

உத்தரப் பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற மையங்களில், அரசு வாகனங்களை நிறுத்தி சோதனையிட்ட சமாஜ்வாதி கட்சியினர் மீது
யோகி அரசு
வழக்குப் போட்டு கைது செய்ய ஆரம்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச சட்டசபைக்கு நடந்த தேர்தல் மார்ச் 10ம் தேதியுடன் முடிவடைந்தது. அதன் பின்னர் வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் பதிவான இவிஎம் பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அந்த மையங்களில் வாக்குப் பெட்டிகளை பாஜகவினர் மாற்றலாம் என்ற அச்சத்தில் சமாஜ்வாதி கட்சியினர் முகாம் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

பைனாகுலர் மூலம் கண்காணிப்பது, வாக்கு எண்ணும் மையங்களுக்கு வந்து செல்லும் வாகனங்களை பரிசோதிப்பது என சமாஜ்வாதி கட்சியினர் தீவிரமாக இருந்தனர். வாக்கு எண்ணிக்கையில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்து விட்டது. இந்த சூட்டோடு இப்போது பழிவாங்கும் நடவடிக்கையில் யோகி அரசு இறங்கியுள்ளது.

அதாவது வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பில் ஈடுபட்ட, அரசு வாகனங்களை நிறுத்தி சோதனையிட்ட சமாஜ்வாதி கட்சியினர் மீது வழக்குப் பதிவு செய்ய ஆரம்பித்துள்ளனராம். அனைத்து மாவட்டங்களிலும் வழக்குகள் பாய ஆரம்பித்துள்ளன. பல இடங்களில் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பஸ்தி மாவட்டத்தில் 100 சமாஜ்வாதி தொண்டர்கள் மீது 7 வழக்குகள் போடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட வழக்குகள் அவர்கள் மீது போடப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி ஆசிஷ் ஸ்ரீவத்சவா கூறியுள்ளார்.

இதுகுறித்து பஸ்தி சாதர் சமாஜ்வாதி எம்எல்ஏ மகேந்திரநாத் யாதவ் கூறுகையில், பாஜக அரசு சமாஜ்வாதி கட்சியினரை பழிவாங்க ஆரம்பித்துள்ளது. மாவட்ட கலெக்டரிடம் இதுகுறித்து நாங்கள் முறையிட்டுள்ளோம். இந்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றார் அவர்.

மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஹப்பூர் னஎன்ற இடத்தில் 36க்கும் மேற்பட்டோர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஹர்டோய் நகரில் 100க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் கைது செய்யப்பட்ட நபர், தேர்தல் முடிவு வெளியான அடுத்த நாளே, பாஜக கூட்டாளியான நிஷாத் கட்சியில் போய் சேர்ந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஆட்சியைப் பிடித்ததுமே பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கி விட்டதாக
யோகி ஆதித்யநாத்
அரசு மீது புகார் கிளம்பியிருப்பது உ.பி. அரசியலை பரபரப்பாக்கியுள்ளது. இதுகுறித்து பாஜக தரப்பு எந்தக் கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.