புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு ஜனவரி 16-ந் தேதி தொடங்கியது. முதலில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பின்னர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. ஏப்ரல் 1-ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், மே 1-ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தியது. மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அப்பணியை வேகப்படுத்தி தடுப்பூசியை செலுத்தியது. இதனால் இந்தியாவில் தடுப்பூசி இயக்கம் சிறப்பாக செயல்பட்டது.
அடுத்த கட்டமாக 15 – 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி 3-ந்தேதி முதல் செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் 60 வயது தாண்டியவர்களுக்கு 3-வது டோசும் செலுத்தப்படுகிறது.
இதற்கிடையே 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு இன்று (புதன்கிழமை) முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அரசு அறிவித்தது. இந்த வயதினருக்கு ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதன்படி இந்தியாவில் 12-14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கியது. முகாம்களில் சிறுவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
இந்தநிலையில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது குறித்து பிரதமர் மோடி இன்று கூறியதாவது:-
இந்தியா தனது குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முயற்சியில் இன்று ஒரு முக்கியமான நாளை எட்டி உள்ளது. 12- 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தடுப்பூசியை பெற தகுதி உடையவர்கள் என்றும், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் 3-வது டோஸ் பெற தகுதி உடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வயதினரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்.
குடிமக்களை பாதுகாக்கவும், தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தவும் 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் தடுப்பூசிகளை உருவாக்கும் பணிகளை தொடங்கினோம். நமது விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தனியார் துறையினர் இந்த சந்தர்ப்பத்தில் முன்னேறிய விதம் பாராட்டுக்குரியது.
2020-ம் ஆண்டு பிற்பகுதியில் 3 தடுப்பூசி உற்பத்தியாளர்கள் ஆய்வகத்திற்கு சென்று நான் பார்வையிட்டேன். மக்களை பாதுகாப்பதற்கான முயற்சிகளின் நேரடி விவரங்களை பெற்றேன். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தடுப்பூசி இயக்கத்தை இந்தியா தொடங்கியது.
உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி செலுத்தும் இந்தியாவில் ‘தடுப்பூசி இயக்கம்’ அறிவியல் சார்ந்தது. இது மக்கள் சக்தியால் வெற்றி பெற்றது.