இலங்கையில் முழுமையாக ஸ்தம்பிக்கப்போகிறதா பேருந்து சேவை? மூன்று நாட்களில் முக்கிய அறிவிப்பு



தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள பேருந்து கட்டணம் போதுமானதல்ல என்பதால் மூன்று நாட்கள் சேவையில் ஈடுபட்டு, அதனால் ஏற்படும் நட்டத்தை சுமக்க முடியாது போனால் எமது தீர்மானத்தை எதிர்வரும் 3 தினங்களில் அரசாங்கத்துக்கு அறிவிப்போம் என அகில இலங்கை பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் செயலாளர் அன்ஜன பிரயன்ஜித் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை அடிப்படையாக் கொண்டு பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.

தற்போது அதிகரிக்கப்பட்டிருக்கும் கட்டணம் மூலம் நாங்கள் நாளாந்தம் எரிபொருளுக்காக செலவிடும் தொகையை கூட பெற்றுக் கொள்ள முடியாது.

இவ்வாறு பயணிகள் போக்குவரத்து சேவையை தொடரமுடியாது.

இதனால் பேருந்து சேவையை மேற்கொள்ளும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதை நிறுத்த முடியாது.

பேருந்து உரிமையாளர்களுக்கு தங்களுக்கு கீழ் பணி புரியும் ஊழியர்கள் இருவருக்கும் சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.

அத்துடன் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதற்கு தேவையான எரிபொருள் சிபெற்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இல்லை. அதனால் அதிகமான பேருந்துகள் வீதி ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

அதேபோன்று பேருந்து கட்டண அதிகரிப்பு வழங்கப்பட்டிருப்பது லங்கா ஐ.ஓ,சி, நிறுவனத்தின் எரிபொருள் விலைக்கு அல்ல.

மாறாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை உயர்வுக்கு அமைவாகும் என்பதை அமைச்சருக்கு தெரிவிக்கின்றோம்.

அத்துடன் நாங்கள் பேருந்து கட்டண அதிகரிப்பை அரசாங்கத்திடம் கோரவில்லை.

மாறாக எரிபொருள் நிவாரணமே கோரி இருந்தோம்.

பேருந்து சேவையில் ஈடுபடுவதற்கு ஒரு லீட்டர் டீசலை 121 ரூபாவுக்கு வழங்குமாறே நாங்கள் கோரி இருந்தோம்.

என்றாலும் போக்குவரத்து அமைச்சர் சிறியதொரு பேருந்து கட்டணமாக அதிகரித்து பேருந்து உரிமையாளர்களை ஏமாற்றிவிடவே நடவடிக்கை எடுத்திருக்கி்ன்றார்.

பேருந்து டயர் ஒன்றின் விலை 35 ஆயிரம் ரூபாவை தண்டி இருக்கின்றது. அப்படி இருக்கும்போது எவ்வாறு இந்த தொழிலை முன்னுக்கு கொண்டு செல்வது?

அதனால் தற்போது அதிகரித்திருக்கும் பேருந்து கட்டணத்தின் அடிப்படையில் எதிர்வரும் 3 நாட்களுக்கு சேவையில் ஈடுபட்டு, அதனால் ஏற்படும் நட்டத்தை எம்மால் சுமக்க முடியாமல்போனால் எமது தீர்மானத்தை அரசாங்கத்துக்கு அறிவிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கிராமப்புற வீதிகளில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.

அத்துடன் மிக அவசியமான நேரங்களில் மாத்திரம் பயண ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.