புதுடெல்லி: உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் மருத்துவக் கல்வியை தொடர மத்திய அரசு உதவ வேண்டும் என நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து மக்களவையில் திமுக அவையினரின் துணைத் தலைவரான கனிமொழி இன்று விதி 377-இன் கீழ் சமர்ப்பித்த கோரிக்கையில் கூறியிருப்பதாவது: ”உக்ரையின் மருத்துவம் படித்த ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம், உக்ரைன்-ரஷ்யா போரின் காரணமாக கேள்விக்குறியாகியுள்ளது. 21,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா திரும்பியுள்ளனர். இவர்களில் சுமார் 1,900 மாணவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இன்னும் பலர் திரும்ப வேண்டியதுள்ளது.
இந்தப் போர் இவர்களின் கல்வியை நிறுத்தியுள்ளது. உடனடியாக உக்ரைன் – ரஷ்ய போர் முடிவுக்கு வராத சூழல் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் தங்கள் படிப்பை தொடர இயலாது.
இதனால், தாயகம் திரும்பிய உக்ரைன் மாணவர்கள், அவர்கள் படிப்பு உக்ரைனில் நின்ற இடத்திலிருந்து இந்தியாவில் படிப்பை தொடர ஒன்றிய அரசு உதவ வேண்டும். இதை, ஒரு முறை எடுக்கும் நடவடிக்கையாக செய்யலாம்.
இது குறித்து, தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளார். இந்திய மருத்துவ சங்கமும் இதுகுறித்து ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.