உக்ரைன் போரால் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தால், ஜேர்மன் மக்கள் குறிப்பிட்ட சில உணவுப்பொருட்களை வாங்கி சேமிக்கத் துவங்கியுள்ளார்கள்.
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் மாவு முதலான உணவுப்பொருட்கள் விநியோகத்தில் பிரச்சினைகள் ஏற்படலாம், அத்துடன் அவற்றின் விலையும் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்திருந்தார்கள்.
அதைத் தொடர்ந்து பல்பொருள் அங்காடிகளில் பொருட்கள் இல்லை என்பது போல் காட்டும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவத் துவங்க, பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்துக்கு அது வழிவகுத்தது.
மக்கள் அதிக அளவில் எண்ணெய் முதலான பொருட்களை வாங்கத் துவங்க, பல்பொருள் அங்காடிகள் ஒருவருக்கு இரண்டு போத்தல்கள் எண்ணெய் மட்டுமே வழங்கப்படும் என்பது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கத் துவங்கியுள்ளன.
ஆகவே, பொருட்களை வாங்கிக் குவிப்பதைத் தவிர்க்குமாறு ஜேர்மன் பெடரல் உணவு வர்த்தக கூட்டமைப்பு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா காலகட்டத்தில் மக்கள் ஒருவருக்கொருவர் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியதைப்போல, இப்போதும் மக்கள் நடந்துகொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளரான Christian Böttcher, தங்கள் வீட்டுக்குத் தேவையான அளவு மட்டுமே பொருட்களை வாங்குமாறு மக்களை வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், உலகில் இதுவரை அப்படி சூரியகாந்தி எண்ணெய்க்குத் தட்டுப்பாடு இருப்பதாக தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், உக்ரைன் சூரியகாந்தி எண்ணெய்க்கான மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் முக்கிய நாடாகும். அத்துடன், உக்ரைனிடம் பெருமளவில் சூரியகாந்தி எண்ணெய்க்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் நாடு ஜேர்மனி என்பதும் குறிப்பிடத்தக்கது.