கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட 59 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். இதில் 11 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி மற்றும் ரூ.84 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பலதரப்பட்ட கிரிப்டோ கரன்ஸிகளில் ரூ.34 லட்சம் அளவுக்கு முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. தற்போது தொண்டாமுத்தூர் தொகுதி எம்எல்ஏவாகவும், சட்டப்பேரவையில் அதிமுக கொறடாவாகவும் உள்ளார். எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது, பதவியை பயன்படுத்தி சென்னை மாநகராட்சியில் ரூ.464 கோடி, கோவை மாநகராட்சியில் ரூ.346.81 கோடி ஊழல் செய்துள்ளதாக 7 பிரிவுகளின்கீழ் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிந்தனர். இதையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி எஸ்.பி.வேலுமணி வீடு உள்ளிட்ட அவர் தொடர்புடைய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி, கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸில் நேற்று முன்தினம் ஒரு புகார் அளித்தார். அதில், ‘எஸ்.பி.வேலுமணி தனது பதவிக்காலத்தில் வருமானத்தைவிட 3,928 சதவீதம் அதிகமாக, அதாவது ரூ.58 கோடியே 23 லட்சத்து 97 ஆயிரத்து 52 அளவுக்கு சொத்து சேர்த்துள்ளார். இதில் தொடர்புடையவர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.
அதன்பேரில், கூடுதல் எஸ்.பி. திவ்யா தலைமையிலான கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸார், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் எஸ்.பி.அன்பரசன், இவரது மனைவி ஹேமலதா, ஆலம் கோல்டு அன்ட் டைமண்ட்ஸ் தனியார் நிறுவனத்தின் பங்குதாரர் ஆர்.சந்திரசேகர், கன்ஸ்ட்ரோமால் கூட்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் கே.சந்திரபிரகாஷ், கன்ஸ்ட்ரானிக்ஸ் இன்டியா பங்குதாரர்கள் ஆர்.கிருஷ்ணவேணி, ஹெச்.கார்த்திக், ஜெ.விஷ்ணுவர்தன், வர்தான் இன்ப்ஃராஸ்டிரக்சர் நிறுவன பங்குதாரர்கள் கே.சுந்தரி, சரவணக்குமார் ஆகிய 7 பேர் மீதும், மகா கணபதி ஜூவல்லர்ஸ் தனியார் நிறுவனம், கன்ஸ்ட்ரோமால் கூட்ஸ் தனியார் நிறுவனம், ஆலம் கோல்டு அன்ட் டைமன்ட்ஸ் தனியார் நிறுவனம் ஆகிய 3 நிறுவனங்கள் மீதும் கூட்டுச்சதி, மோசடி, நம்பிக்கை மோசடி, ஊழல் தடுப்பு சட்டம் ஆகிய 4 பிரிவுகளின்கீழ் நேற்று முன்தினம் வழக்கு பதிந்தனர்.
லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஜிபி கந்தசாமி உத்தரவைத் தொடர்ந்து, கோவை குனியமுத்தூரை அடுத்த சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீடு, அவருக்கு தொடர்புடையவர்களின் வீடுகள், நிறுவனங்களில் நேற்று காலை 6 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையை தொடங்கினர். சுகுணாபுரம் வீட்டில் இருந்த எஸ்.பி.வேலுமணி சோதனைக்கு ஒத்துழைத்தார். வீட்டிலிருந்த ஆவணங்கள், தாங்கள் சேகரித்து வைத்திருந்த சொத்து விவரங்கள் தொடர்பான ஆவணங்கள் குறித்து வேலுமணியிடம் போலீஸார் விசாரித்தனர். எஸ்.பி.வேலுமணி, அவரது குடும்பத்தினர் சமீபத்தில் வெளிநாடு சென்றிருந்தனர். அங்கு ஏதாவது தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரித்தனர்.
வழக்கில் தொடர்புடைய எஸ்.பி.அன்பரசன்,சந்திரசேகர், சந்திர பிரகாஷ், கிருஷ்ணவேணி மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.ஆர்.ஜெயராம் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
அதிகாரிகளின் வீடுகளில்..
மேலும், ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி யின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி, போலீஸ் கூடுதல் எஸ்.பி அனிதா, நக்சல் தடுப்புப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகநாதன், இன்ஸ்பெக்டர் சந்திரகாந்தா, கோவை மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் துவாரகநாத் சிங், போலீஸ் பயிற்சிக் கல்லூரி முதல்வர் டிஎஸ்பி சண்முகம் ஆகியோரின் வீடுகள் உட்பட கோவையில் மட்டும் 42 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் சோதனை நடந்தது. சென்னையில் 7, சேலத்தில் 4, திருப்பூரில் 2, திருப்பத்தூரில் 1, நாமக்கல், கிருஷ்ணகிரியில் தலா ஒரு இடம், கேரள மாநிலம் ஆனைக்கட்டியில் உள்ள எஸ்.பி.வேலுமணி தரப்பின் சொகுசு பங்களா என மொத்தம் 59 இடங்களில் ஒரேநேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.
சென்னை மயிலாப்பூர் நரசிம்மபுரம் சாயிபாபா காலனியில் உள்ள கன்ஸ்ட்ரோமல் கூட்ஸ் நிறுவனம், அண்ணா சாலையில் உள்ள ஆலம் கோல்டு அண்ட் டைமண்ட் நிறுவனம், தி.நகரில் உள்ள சிப்ரியன் ஹோட்டல்ஸ் நிறுவனம், நந்தனம் சிஐடி நகரில் உள்ள மஹாகணபதி ஜூவல்லஸ், கோடம்பாக்கத்தில் ஜே.விஷ்ணுவர்தன் வீடு, ஆதம்பாக்கத்தில் சரவணகுமார் வீடு, மயிலாப்பூரில் வேலுமணியின் மெய்க்காப்பாளராக இருந்த தலைமைக் காவலர் எல்.ஸ்டாலின் வீடு ஆகிய 7 இடங்களில் சோதனை நடந்தது.
லஞ்ச ஒழிப்பு சோதனை நடப்பதை அறிந்தவுடன் எஸ்.பி.வேலுமணியின் வீடு முன்பு அதிமுகவினர் திரண்டனர். அவர்கள் போலீஸாரையும், திமுக அரசையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி, கருப்பணன், அதிமுக எம்எல்ஏக்கள் ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், பொள்ளாச்சி ஜெயராமன், பிஆர்ஜி அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், வி.பி.கந்தசாமி, அமுல் கந்தசாமி ஆகியோரும் வேலுமணி வீட்டுக்கு வந்தனர். நேற்று இரவு வரை சோதனை நீடித்தது. எஸ்.பி.வேலுமணி வீட்டில் 2-வது முறையாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தியிருப்பது குறிப் பிடத்தக்கது.
கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு
இந்த சோதனை குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்றிரவு வெளி யிட்ட அறிக்கையில், ‘தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, அமைச்சராக இருந்தபோது, 2016 ஏப்ரல் 26 முதல் கடந்த ஆண்டு மார்ச் 15 வரையிலான காலகட்டத்தில், 12 நபர்களின் துணையுடன் கூட்டுச்சதி புரிந்து, வருமானத்துக்கு அதிகமாக ரூ.58 கோடியே 23 லட்சத்து 97 ஆயிரத்து 52 அளவுக்கு சொத்து சேர்த்ததாக கிடைத்த நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில் 59 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சோதனையில் 11.153 கிலோ தங்கம், 118.506 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கணக்கில் வராத பணம் என்ற அடிப்படையில் ரூ.84 லட்சம், சான்றுப் பொருட்களான அலைபேசிகள், பல வங்கிகளில் உள்ள லாக்கர் சாவிகள், மடிக்கணினி, கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்குக்கு தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், ரூ.34 லட்சம் அளவுக்கு பலதரப்பட்ட கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. தொடர் விசாரணை நடை பெற்று வருகிறது’ என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.