Tamilnadu News Update : தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் லஞ்சஒழித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், நேற்று 2-வது முறையாக மீண்டும் சோதனை நடத்தினர்.
கோவை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 42 இடங்கள் உட்பட மொத்தம் 59 இடங்களில் லஞ்ச ஒழித்துறை அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையில், கோவையில் உள்ள அமைச்சர் எஸ்பி வேலுமணியின் வீடு, தொண்டாமுதூரில் உள்ள அவரது பண்ணை வீடு, அலுவலங்கள், அவரது சகோதரர் வீடு மற்றும் சென்னை சேலம், கிருஷ்ணகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை நடத்தப்பட்டது.
காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 8 மணிக்கு நிறைவு பெற்றதை தொடர்ந்து இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் கணக்கில் வராத பணம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், இதுவரை 11 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி மற்றும் கணக்கில் வராத ரூ84 லட்சம் பணம், பல வங்கி கணக்கில் லாக்கர்கள், கணிணி லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரூ 34 லட்சம் மதிப்புள்ள பலதரப்பட்ட க்ரிப்டோ கரண்சிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகினறனர். எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்கள் மட்டுமல்லாது அவரது உறவினர்கள், சந்திரசேகர், சந்திரபிரகாஷ், கிருஷ்ணவேணி, மற்றும் கோவை சிங்காநல்லூர் அதிமுக எம்எல்ஏ கே.ஆர். ஜெயராமன் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.
அதிமுக ஆட்சியில், நகராட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்பி வேலுமணி, தற்போது கோவை தொண்டாமுதூர் தொகுதியின் எம்எல்ஏவாகவும், அதிமுக கொறடாவாகவும இருந்து வருகிறார். இவர் பதவியில் இருந்தபோது சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் சுமார் 800 கோடிக்கு அதிகமாக ஊழல் செய்துள்ளதாக இவர் மீது 7 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது