புது டில்லி: ஹுருன் நிறுவனம் வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் பட்டியலில் டாப் 10 இடங்களில் இந்தியாவிலிருந்து ஒரே தொழிலதிபராக ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி இடம்பெற்றுள்ளார்.
2022ம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலை ஹூருன் நிறுவனம், எம்3எம் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளது. அதில் முகேஷ் அம்பானி சுமார் ரூ.7.7 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 9ம் இடத்தை பிடித்துள்ளார். இப்பட்டியலில் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார். அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ் இரண்டாமிடமும், பிரான்ஸ் ஆடம்பர பொருட்கள் நிறுவனமான எல்.வி.எம்.எச்., சி.இ.ஓ., பெர்னார்ட் அர்னால்ட் மூன்றாமிடமும் பிடித்துள்ளனர்.
முகேஷ் அம்பானிக்கு அடுத்தப்படியாக இந்தியாவிலிருந்து இடம்பெற்றுள்ள முன்னணி தொழிலதிபர்கள் பட்டியலில் அதானி 2ம் இடம் வகிக்கிறார். அவரது சொத்து மதிப்பு சுமார் 6 லட்சம் கோடி ரூபாய். எச்.சி.எல்., நிறுவனர் ஷிவ் நாடார் ரூ.2 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். சீரம் மருந்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சைரஸ் பூனாவாலா சுமார் ரூ.1.9 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் நான்காம் இடம் பிடித்துள்ளார். மேலும் இப்பட்டியலில் லட்சுமி மிட்டல், டிமார்ட் நிறுவனர் தமானி, ஹிந்துஜா குடும்பத்தினர், குமார் ஆகியோர் முன்னணி இடம் வகிக்கின்றனர்.
இந்தியாவிலிருந்து 215 கோடீஸ்வரர்கள் இப்பட்டியலில் உள்ளனர். அதில் நைக்கா நிறுவனர் பால்குனி நாயர் உட்பட 58 பேர் புதியவர்கள். உலகளவில் பெரிய பணக்காரர்களை உருவாக்கும் நாடாக இந்தியா தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது. கோடீஸ்வரர்களின் நகரமாக மும்பை விளங்குகிறது. 72 பேர் அங்கு வசிக்கின்றனர்.
அடுத்ததாக டில்லியில் 51 பில்லியனர்களும், மூன்றாவதாக பெங்களூருவில் 28 பில்லியனர்களும் வசிக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய பில்லியனர்கள் சுமார் 50 லட்சம் கோடி அளவுக்கு சொத்துக்கள் சேர்த்துள்ளனர். இது யு.ஏ.இ.,யின் ஜி.டி.பி.,யில் இரு மடங்கு. சுவிட்சர்லாந்து ஜி.டி.பி.,க்கு இணையானதாகும்.
Advertisement