ஜெய்ப்பூர்: கபில் சிபலுக்கு காங்கிரசின் ஏ, பி, சி… தெரியுமா? என்ற அடிப்படையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கேள்வி எழுப்பி உள்ளார். நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, சோனியா காந்தி குடும்பத்தினர் மீது கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், ‘காந்திகள் (சோனியா, ராகுல், பிரியங்கா) தலைமைப் பொறுப்பில் இருந்து விலக வேண்டும். கட்சியை வழிநடத்த வேறு ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியானது தலைமையின் மீது நம்பிக்கை வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வெளியே உள்ளவர்கள், கட்சியை விட்டு விலகியிருப்பதால் கட்சியை வழிநடத்த புதிய தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்’ என்று கோரினார். இவரது பேச்சுக்கு காங்கிரசில் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுகுறித்து ராஜஸ்தான் முதலமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான அசோக் கெலாட் கூறுகையில், ‘கபில் சிபல் காங்கிரஸ் கலாசாரத்தை சேர்ந்தவர் அல்ல; அவர் காங்கிரஸ் கட்சிக்குள் நுழைந்த புகழ்பெற்ற வழக்கறிஞர் மட்டுமே. அவருக்கு நிறைய வாய்ப்புகளை சோனியா, ராகுல் வழங்கினர். இல்லாத ஒருவரிடமிருந்து மரியாதையை எதிர்பார்க்க முடியாது. காங்கிரஸ் கட்சியின் ஏ, பி, சி… அவருக்கு தெரியுமா?’ என்று கேள்வி எழுப்பி உள்ளார். தொடர்ந்து காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் பவன் கேரா கூறுகையில், ‘தலைமைக்கு எதிராக பகிரங்கமாக கருத்து தெரிவிப்பதற்கு பதிலாக, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கபில் சிபல் போட்டியிட வேண்டும். காங்கிரஸை வழிநடத்த விரும்புபவர்கள் தற்போதைய தலைமைக்கு எதிராக தினமும் முழக்கமிடுவதற்குப் பதிலாக கட்சித் தலைவர் பதவிக்கு நேரடியாக போட்டியிடலாம்’ என்று கூறினார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சமூக வலைதளங்கள் மூலமாகவும், பொது தளங்களிலும் மோதிக் கொள்வதால் தேசிய அரசியலில் பரபரப்பை அதிகரித்து வருகிறது. இன்றிரவு ஜி-23 ‘டின்னர்’5 மாநில தேர்தல் ேதால்விக்கு பின்னர் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் வீட்டில் தலைவர்கள் சந்திப்பு, சோனியா தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம், மூத்த தலைவர்களுக்குள் கருத்து மோதல் என்று காங்கிரஸ் கட்சிக்குள் அடுத்தடுத்த நகர்வுகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக இன்றிரவு டெல்லியில் மூத்த தலைவர் கபில் சிபலின் வீட்டில், அதிருப்தி காங்கிரஸ் தலைவர்கள் எனக் கூறப்படும் ஜி-23 தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இன்றிரவு மூத்த தலைவர்களுக்கு கபில் சிபல் டின்னர் பார்ட்டி வைக்கிறார். அதிருப்தி தலைவர்கள் மட்டுமின்றி, ஒத்த கருத்துள்ள தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனால், யாரெல்லாம் கபில் சிபலின் டின்னர் பார்ட்டியில் பங்கேற்கப் போகிறார்கள்? காங்கிரசில் அடுத்து என்ன நடக்கப் போகிறது? என்ற விவாதம் தேசிய ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.