புகழ்பெற்ற விலங்கு ஓவியரான ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரோசா போன்ஹூரின் 200-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக அவர் வரைந்த புகழ்பெற்ற செம்மறி ஆடுகளை கூகுள் நிறுவனம் தனது இன்றைய டூடுலாக வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
19-ம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் தவிர்க்க முடியாத பெண் ஓவியராகவும், விலங்குகளை வரைவதில் புகழ்பெற்றவராகவும் விளங்கிய ரோசா போன்ஹூர், பிரான்சின் போர்டோக்ஸில் 1822-ம் ஆண்டு பிறந்தார். இயற்கை சூழலை வரைவதில் வல்லவரான போன்ஹோரின் தந்தை, ஓவியங்களின் நுணுக்கங்களையும் அதன் முக்கியத்துவத்தையும் போன்ஹூருக்குக் கற்றுக் கொடுத்துள்ளார். தந்தையின் ஊக்குவிப்புடன் கூடிய கலை ஆர்வம் போன்ஹூருக்கு மிகுதியாக இருந்ததால் ஓவியத்தின் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்ததோடு, அதற்கு முன்னதாக ஓவியத் துறையின் ஜாம்பவான்களாக இருந்தவர்கள் வகுத்திருந்த விதிகளையும் மாற்றி கட்டமைக்க முற்பட்டார்.
நுணுக்கமாக ஒவியம் வரைவதை கற்றுத் தேர்ந்த போன்ஹூரின் முதல் ஓவியக் கண்காட்சி அவரது 19 வயதில் நடந்தேறியது. விலங்குகள் மீதான நாட்டம் மற்றும் அவற்றை வரைவதில் ஏற்பட்ட ஆர்வம், மாமிசத்திற்காக விலங்குகளை வெட்டும் இறைச்சிக் கூடங்கள் வரை போன்ஹூரை அழைத்துச் சென்றது. 1941-ம் ஆண்டு முதல் அவர் வரைந்த ஓவியங்கள் சுமார் 12 ஆண்டுகளுக்கு புகழ்பெற்ற பாரிஸ் சலூன் அரங்கத்தில் தொடர்ச்சியாக காட்சிப்படுத்தப்பட்டது. குறிப்பாக, 1949-ம் ஆண்டு `Plowing in Nivernais’ எனும் விவசாயத்திற்காக உழவு செய்யும் காட்சிகளை ஓவியங்களாக வரைந்து காட்சிப்படுத்தியது போன்ஹூரை தொழில்முறை ஓவியராக அறிமுகப்படுத்தியது. 1853-ல் பாரிஸ் நகரத்தில் நடைபெற்ற குதிரைச் சந்தை ஒன்றின் காட்சிகளை தத்ரூபமாக போன்ஹூர் ஓவியமாக வரைந்தது அவருக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. சொந்த நாடான பிரான்ஸில் கிடைத்த ஆதரவைவிட, லண்டனில் போன்ஹூரின் ஓவியங்களுக்கு ஏகபோக வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆணாதிக்க சிந்தனைகள் உலகம் முழுவதும் வன்மங்களை வீசிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் ஓவியராகக் கோலோச்சிய போன்ஹோருக்கு பிரெஞ்சு பேரரசால் ஃபிரான்ஸின் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான `லெஜியன் ஆஃப் ஹானர்’ வழங்கப்பட்டது. இந்த விருது பெற்ற முதல் பெண் அவர்தான்.
புகழ்பெற்ற ஓவியராக இருந்த போன்ஹூர், ஒரு தன்பாலின ஈர்ப்பாளர். நடாலி மைக்காஸ் என்ற பெண்ணுடன் தனது வாழ்வை தொடர்ந்தார். பெண்கள், ஆண்களது ஆடைகளாகக் கருதப்படும் பேன்ட் ஆகியவற்றை அணியக் கூடாது என்ற ஃபிரான்ஸ் நாட்டின் 1800-ம் ஆண்டு சட்டத்துக்கு எதிராக முன்னெடுப்புகளை மேற்கொண்டு வெற்றியையும் பெற்றார். அவரின் முன்னெடுப்புகளால் `கிராஸ்-டிரெஸ்ஸிங் பெர்மிட்’ சட்டம் அந்நாட்டில் இயற்றப்பட்டது.
`கலை ஒரு கொடுங்கோலன்’ எனக் கூறிய போன்ஹூர், `கலையானது இதயம், மூளை, ஆன்மா, உடல் ஆகியவற்றை எனது முழு சம்மதத்துடன் கோருகிறது. நம் எண்ணங்கள் வெற்றி பெற, நம்முடைய ஆதரவை முழுமையாகப் பெறாத நிலையில், அது வெற்றி பெறாது. நான் கலையை மணந்தேன். அது என் கணவர், என் உலகம், என் வாழ்க்கைக் கனவு, நான் சுவாசிக்கும் காற்று. எனக்கு வேறு எதுவும் தெரியாது, வேறு எதையும் உணரவில்லை, வேறு எதையும் நினைக்கவும் இல்லை’ என ஓவியத்தின் மீதும் சிற்பக் கலையின் மீதும் தான் வைத்திருந்த அன்பை வார்த்தைகளால் வெளிப்படுத்தினார்.
1899-ம் ஆண்டு தனது 77 வயதில் போன்ஹூர் இயற்கை எய்திய நிலையில், அவர் வாழ்ந்த கலைநயம் மிக்க வீடு, அவரது ஓவியங்களை பெருமைப்படுத்தும் விதமாக இப்போது அருங்காட்சியமாக மாற்றப்பட்டு காட்சிக்கு திறந்து விடப்பட்டுள்ளது. கலையைத் தனது மூச்சாக ரசித்த எத்தனையோ கலைஞர்களில், இறுதிவரை அர்ப்பணிப்புடனும், பெண்ணிய சிந்தனைகளுடம் வாழ்ந்து மறைந்த ரோசா போன்ஹூர் போற்றுதலுக்கு உரியவர்.