கள்ளன் திரைப்படத்தை தடை செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலான நிலையில், மதுரையெங்கும் ஒட்டப்பட்டுள்ள கண்டன சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எழுத்தாளர் சந்திரா இயக்கி, இயக்குநர் கரு.பழனியப்பன் நடித்துள்ள ‘கள்ளன்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை சந்தித்து வருகிறது. இப்படத்தை தடை செய்ய வேண்டுமென்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலூரை சேர்ந்த கலைமணி அம்பலம் தாக்கல் செய்துள்ள மனுவில், “சந்திரா இயக்கி, கரு.பழனியப்பன் நடிக்கும் படத்திற்கு ‘கள்ளன்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழக அரசு ஆவணங்களில் கள்ளன் என்று இருந்த பெயர் பின்பு கள்ளர் என்று மாற்றப்பட்டது. அந்தப் பெயரிலயே அரசு சாதி சான்றிதழை வழங்கி வருகிறது.
தற்போது ‘கள்ளன்’ என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் கொள்ளைக்கூட்டத்தினரை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இது ‘கள்ளர்’ சமூகத்தின் பெயரைக் களங்கப்படுத்தும் விதமாகவும், அந்தச் சமூக மக்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கிறது. எனவே ‘கள்ளன்’ என்ற பெயரில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தை வெளியிட தடை விதித்து, அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி மத்தியத் திரைப்பட சான்று வாரிய இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை மார்ச் 17-ம் தேதிக்கு (நாளை) தள்ளி வைத்துள்ளார்.
இந்த டைட்டில் சர்ச்சை கடந்த ஆண்டு டீசர் வெளியீட்டின்போது எழுந்த நிலையில், தற்போது படம் வெளியாகவுள்ள நிலையில் மீண்டும் எழுந்துள்ளது.
இந்நிலையில் இப்படத்துக்கு எதிராக மதுரை நகரில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.