சென்னை:
தமிழகத்தில்
கொரோனா தொற்று
நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றின் 3-வது அலை வேகமாக பரவியது. கொரோனா பரவல் வேகம் அதிகமாக இருந்தாலும் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டு விட்டதால் அதன் பாதிப்பு பெரிதாக இல்லை.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாகவே
கொரோனா தொற்று
படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்த மாதத்தில் தொற்று வேகமாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நேற்று 19 மாவட்டங்கள் கொரோனா தொற்றின் பிடியில் இருந்து விடுபட்டுள்ளன.
தமிழகத்தில் நேற்று புதிதாக 35 ஆயிரத்து 555 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 77 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 28 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். கோவை மாவட்டத்தில் 10 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும் பாதிக்கப்பட்டனர்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேர் பாதிக்கப்பட்டனர். நீலகிரி, நாமக்கல் மாவட்டங்களில் தலா 2 பேரும், விருதுநகர், திண்டுக்கல், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருப்பூர் மாவட்டங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
தேனி, அரியலூர், திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, விழுப்புரம், கரூர், மதுரை, கடலூர், கன்னியாகுமரி, சேலம், திருச்சி, திருவாரூர், ஈரோடு ஆகிய 19 மாவட்டங்களில் கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை.
நேற்று வரை மொத்தம் 34 லட்சத்து 52 ஆயிரத்து 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 ஆயிரத்து 24 பேர் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 169 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.