புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் மத்திய அரசின் கீழ் தேசிய நூலகம் அமைந்துள்ளது. இதில் நாட்டில் முதன்முதலாக மத்திய அரசின் மதிப்புமிக்க திட்டமாக ’மொழிகளுக்கான அருங்காட்சியகம் (Museum of Word)’ அமைக்கப்பட உள்ளது.
இது, இந்தியாவில் பேச்சுவழக்கிலும் எழுத்து வடிவிலும் உள்ளஇந்திய மொழிகளின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் அமைய உள்ளது. இதில், மொழி மற்றும் மொழியின் பயன்பாடுகள் தொடர்பான அனைத்தும் சேகரிக்கப்பட்டு, ஒரு செயல்பாட்டு மையமாக உருவாக்கப்பட்டு, காட்சிப்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம், தேசிய நூலகத்தின் செயல்பாடுகள் அதன் முக்கியப் பணிக்கு அப்பால் விரிவுபடுத்தப்படும். இந்த அருங்காட்சியகம், வாழ்க்கைக்கான அறிவார்ந்த ஆராய்ச்சிக்கு உதவிடும் வகையில், ஒரு புதிய கலாச்சார மையமாக அமைய உள்ளது.
இதற்கான கருத்துரு, கட்டமைப்பு உள்ளிட்ட திட்ட அறிக்கையை தயாரிக்க ஒரு தனியார் நிறுவனம் அமர்த்தப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்க ஆலோசனைகள் அளிக்கும் பொருட்டு மத்திய அரசால் 30 உறுப்பினர்களுடன் ஒரு உள்ளடக்க ஆய்வுக்குழு அமர்த்தப்படுகிறது. தேசிய நூலகத்தின் இயக்குநர் ஜெனரல் தலைமையில் செயல்படவிருக்கும் இக்குழுவின் உறுப்பினர்களை, மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சகம் அமர்த்துகிறது.
இதில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, உருது, இந்தி, சம்ஸ்கிருதம், இந்தோ ஆரியன், திபேத்தியன் உள்ளிட்ட பல்வேறு மொழியியல் வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழுக்காக தஞ்சை தமிழ் பல்கலை. முன்னாள் துணை வேந் தரான பேராசிரியர் கோ.பாலசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த அக்டோபரில் பல்கலை.யிலிருந்து இவர் ஓய்வு பெற்றார். இதற்கு முன், கேரளாவின் கோழிக்கோடு பல்கலைக்கழகம், ஆந்திரமாநிலம் குப்பத்திலுள்ள திராவிடப்பல்கலைக்கழகம், போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார்.
இவர், தமிழியல் மற்றும் மொழியியல் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார். மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்ப்புகளைச் செய்துள்ளார். மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினர் பேசும் மொழிகளின்ஆய்வுகளை மேற்கொண்டுள் ளார். முனைவர் பாலசுப்பிரமணியனுக்கு, 2013-ல் ஆந்திர அரசால்நல்லாசிரியர் விருதும் அளிக்கப் பட்டிருந்தது.