பெங்களூரு : கோடைக்கு முன்னே வெயில் கொளுத்துவதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இளநீர், குளிர்பானங்களை தேடி செல்கின்றனர்.கர்நாடகாவில் செப்டம்பரில் ஆரம்பித்த குளிர், சிவராத்திரி வரை தொடர்ந்தது. தற்போது வெயில் கொளுத்துகிறது.
கோடையின் ஆரம்பத்திலேயே இந்தளவுக்கு வெயில் என்றால் இன்னும் வரும் நாட்களில் வெயில் தாக்கம் எந்த அளவுக்கு இருக்குமோ என்ற பயம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.’பூங்கா நகர்’ எனப்படும் பெங்களூரு தற்போது ‘புழுக்கம்’ நிறைந்த நகரமாக மாறி விட்டதாக கூறுகின்றனர். மக்கள் வீட்டில் இருக்கும்போது எந்த நேரமும் மின் விசிறி போடாமல் இருப்பதில்லை. வெளியில் செல்வோர் இளநீர், குளிர்பானத்தை குடித்து உடலை குளிர்வித்து கொள்கின்றனர்.
கோடையில் கூட குளிர்ச்சியாக இருக்கும் மலைநாடு மாவட்டமான சிக்கமகளூரிலும் கூட மக்கள் வெயிலை அனுபவித்து வருகின்றனர். இந்த முறை கர்நாடகா முழுவதும் நல்ல மழை பெய்து ஏரி, குளங்கள் நிரம்பின. பெரும்பாலான ஏரிகள் எந்த வேகத்தில் நிரம்பியதோ, அதே வேகத்தில் வறண்டு விட்டது.இதனால் பல இடங்களில் இப்போதே குடிநீர் பிரச்னை ஏற்பட்டு விட்டது. பெண்கள் குடத்துடன் போராட்டம் நடத்த ஆரம்பித்து விட்டனர். ஏப்ரல், மே மாதத்தில் குடிநீர் பிரச்னை எந்த அளவுக்கு இருக்குமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளும் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.அது மட்டுமின்றி, மின்சார பற்றாக்குறையால் மின்வெட்டு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் இதுவரை இல்லாத அளவு மின் வெட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது பெங்களூருவாசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Advertisement