இந்தியா தன்னுடைய எண்ணெய் தேவைக்காக பெரும்பாலும் ரஷ்யாவைச் சார்ந்துள்ளது. இந்தியாவின் 85% கச்சா எண்ணெய் தேவையானது இறக்குமதியின் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. ஏப்ரல் 2021 மற்றும் ஜனவரி 2022-க்கு இடையில் இந்தியாவால் இறக்குமதி செய்யப்பட்ட 176 மில்லியன் டன்களில் 3.6 மில்லியன் டன் ரஷ்ய கச்சா எண்ணெய். இந்நிலையில், உக்ரைன் ரஷ்யா போரினால் இறக்குமதி கட்டணங்களை ரஷ்யா உயர்த்தி உள்ளது.
இதனால் இந்தியா 3.5 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய்யைத் தள்ளுபடியில் வாங்குவதற்காக ரஷ்யாவுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்பது போன்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, கச்சா எண்ணெய்யை இந்தியாவிற்கு வழங்குவதற்கான கப்பல் மற்றும் காப்பீட்டை ரஷ்யா கவனித்துக் கொள்ளும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், பல நாடுகளின் பொருளாதாரத் தடைகளை மீறி ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதற்கான கதவுகளை இந்தியா திறந்து வைத்திருப்பதை உணர்த்தும். அதே சமயம் ரஷ்ய கச்சா எண்ணெய் விலை தள்ளுபடியானது இந்தியாவிற்கான செலவைக் குறைக்க உதவும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதை குறித்து பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் பூரி ராஜ்யசபாவில் திங்களன்று பேசுகையில், தள்ளுபடி செய்யப்பட்ட எண்ணெய்க்கான ரஷ்ய சலுகையை இந்தியா பரிசீலிப்பதாகத் தெரிவித்தார். எவ்வாறாயினும், பணம் செலுத்தும் வழிமுறைகள் தற்போது தெளிவாக இல்லை என்பதால் அடுத்த சில நாட்களில் இந்த பிரச்சினையில் இறுதி முடிவு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.