சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்காக, நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தத் தவறியதற்காக, சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளர் அன்சுல் மிஸ்ராவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்காக, விமான நிலையத்தின் அருகில் உள்ள தாரப்பாக்கம், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம் மற்றும் மணப்பாக்கம் உள்ளிட்ட சில குடியிருப்பு பகுதி நிலங்களை, நிறுவன ரீதியான பகுதியாக அரசு அறிவித்தது.
இதை எதிர்த்து’ நில உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில், நிலத்தை கையகப்படுத்தும் முடிவை கைவிடுவதாக அரசு அறிவித்தது. இதையடுத்து’ தாரப்பாக்கம் பகுதியை’ நிறுவன மண்டலத்திலிருந்து, குடியிருப்பு மண்டலமாக மறுவகைப்படுத்த கோரி’ இவிபி டவுன்சிப்பை சேர்ந்த கிரீஷ் பிகே என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நிலத்தை வகைமாற்றம் செய்வது தொடர்பாக தொழில்நுட்பக் குழு அளித்த பரிந்துரை மீது 4 மாதங்களில் முடிவெடுக்க சிஎம்டிஏ-விற்கு 2020ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அமல்படுத்தாததால், சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளர் அன்சுல் மிஸ்ராவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
மார்ச் 3 அன்று, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கவில்லை என்றால், சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளர் நேரில் ஆஜராகுமாறு பெஞ்ச் உத்தரவிட்டது.
இந்த வழக்கு’ தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று (மார்ச்.16) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அன்சுல் மிஸ்ரா ஆஜராகவில்லை.
இதையடுத்து, சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளர் அன்சுல் மிஸ்ராவை ஆஜர்படுத்தும் வகையில், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்ட்டை பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை மார்ச் 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“