சின்ன சின்னதாய்
பா.ஜ.,வின் ‘பி டீம்’ யார்?”முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு தைரியம் இருந்தால் அவரின் சொந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டட்டும்,” என்று கோலார் மாவட்ட ம.ஜ.த., தலைவர் வெங்கட் ஷிவா ரெட்டி தெரிவித்தார்.கோலார் டூம் லைட் சர்க்கிளில் உள்ள ம.ஜ.த. அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பா.ஜ., வின் ‘பி டீம்’ தான் ம.ஜ.த., என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். அவரின் தரத்துக்கு ஏற்றதை கூற வேண்டும். இவர் ‘பி’ டீம் போல பேசலாமா?இவர் போட்டியிட்டால் ஜெயிக்க முடியுமா என்ற சந்தேகத்தில் தொகுதிகளை தேடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு தைரியம் இருந்தால் அவரின் சொந்த தொகுதியில் போட்டியிட்டு வென்று காட்டட்டும் பார்க்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
சட்ட விரோத கல் குவாரிக்கு எதிர்ப்பு
கோலாரின் தானஹள்ளி, தின்னஹள்ளி ஆகிய இடங்களில் கல் குவாரிகள் சட்டவிரோதமாக நடந்து வருகிறது. இதனால் இவ்விரு கிராமங்களை சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர்.’சட்ட விரோத கல்குவாரி களை தடுத்து நிறுத்த வேண்டும். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பையும், மாநிலத்தின் வருவாயை சீர்குலைக்க செய்கிறது’ எனவும் கர்நாடக அரசுக்கு புகார் செய்துள்ளனர்.
ஒயின் ஷாப் கேஷியர் கொலை
கோலாரில் உள்ள தனியார் மதுபானக் கடையில் கேரியர் மோகன், 30, என்பவரை கும்பல் ஒன்று கத்தியால் குத்திக் கொலை செய்த கொடூரம் நடந்தது. கோலாரின் டேக்கல் சாலையில் உள்ள மதுபான கடையில் ஐந்து வாலிபர்கள் கேஷியரிடம் தகராறு செய்தனர். அவரை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாகினர்.இதில் மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எதனால் தகராறு ஏற்பட்டது. கொலைக்கான காரணம் என்ன, என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பழைய கட்டடம் புதுப்பிப்பு
கோலாரில் 150 ஆண்டு பழமையான கட்டடத்தில் இயங்கி வந்த அலுவலகத்தை, புதிய கட்டடத்துக்கு இடமாற்றம் செய்து விட்டனர். புராதன கால பழமையான அந்த கட்டடத்தை புதுப்பிக்க வேண்டும் என கோலார் மக்களின் விருப்பமாக இருந்தது. புதுப்பிக்கும் பணியை கர்நாடக அரசு துவக்கி உள்ளது.இக்கட்டடத்தை தொல்பொருள் ஆராய்ச்சி த்துறையின் பொறுப்பில் ஒப்படைக்க உள்ளனர்.
கிருஷ்ண தர்பார் நாடகம்
மாலுாரின் நாகனஹள்ளி கிராமத்தில் ‘கிருஷ்ண தர்பார் என்ற நாடகம் நேற்று நடந்தது. கிருஷ்ண பரமாத்மாவின் அற்புதங்கள், லீலைகள் குறித்து கதாபாத்திரங்களை ஏற்படுத்தியிருந்தனர்.மக்களுக்கு நல்வழி புகட்டும் சமுதாய அக்கறையை வெளிப்படுத்தும் நாடகமாக இதனை ஏற்படுத்தியிருந்தனர். இந்த நாடகத்தை மாலூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நஞ்சே கவுடா துவக்கி வைத்தார். நாடகத்தை கிராம மக்கள் ஏராளமானோர் ரசித்து மகிழ்ந்தனர்.
இடமாற்றம் ரத்து
பங்காருபேட்டை தாசில்தார் தயானந்தாவுக்கும், தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாராயணசாமிக்கும் கடந்த ஆறு மாதமாக தகராறு ஏற்பட்டு வந்தது.தாசில்தார் தயானந்தா வை பணியிடம் மாற்ற வேண்டும் என அரசை வலியுறுத்தி வந்தார். அதுவரை மினி விதான்சவுதாவில் உள்ள அவரின் எம்.எல்.ஏ., அலுவலகத்துக்கு வருவதில்லை என அறிவித்திருந்தார்.இந்நிலையில் தாசில்தார் இடமாற்றம் செய்ய உத்தரவு தயாரானது. ஆனால், மாவட்ட பொறுப்பு அமைச்சர் முனிரத்தினா, கோலார் பா.ஜ., எம்.பி.முனிசாமி ஆகியோர் தாசில்தார் முனிரத்தினாவுக்கு ஆதரவாக செயல்பட்டு அவரின் இடமாற்ற கோரிக்கையை ரத்து செய்து அவரையே தாசில்தார் பணியை தொடருமாறு உத்தரவு அறிவிக்க ப்பட்டது.
சிறுவர்களுக்கு தடுப்பூசி
கோலார் எஸ்.என்.ஆர்., அரசு மருத்துவமனையில் 12 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட சுகாதார தலைமை அதிகாரி டாக்டர் ஜெகதீஷ், கல்வித் துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.