பீஜிங் : சீனாவில் கொரோனா அதிகரிப்பால், சில பகுதிகளில் ஊரடங்கு அமலாகி உள்ளது. ‘சீன தொழில் நகரங்கள் முடக்கப்பட்டால், அது சர்வதேச அளவில் வணிக ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும்’ என, பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
நம் அண்டை நாடான சீனா மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பொருளாதார நிபுணர்கள் கூறியதாவது: சீனாவின் தொழில்நுட்ப மற்றும் நிதி மையமான ஷென்சென் மற்றும் வாகன உற்பத்தி மையமான சாங்சுன் ஆகியவற்றில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது; இது சீனா மற்றும் ஹாங்காங் பங்கு சந்தையில் பெரும் சரிவை ஏற்படுத்தி உள்ளது.
அணு ஆயுதப்போரால் உலக பொருளாதாரம் எந்த அளவு முடங்குமோ, அதே நிலை வணிக நடவடிக்கைகளை சீனா முடக்கினாலும் உருவாகும். ஏனெனில், கணக்கில் அடங்கா உற்பத்தி மற்றும் வினியோக சங்கிலிகள் சீனா வழியாக செல்கின்றன.தற்போது முடக்கப்பட்ட பகுதிகளை தவிர, பிற நகரங்களில் உள்ள தொழிற்சாலைகள், வினியோகஸ்தர்களை தொழில்துறையினர் பயன்படுத்தலாம்.
ஆனால் ஷென்சென், ஷாங்காய் அதன் அருகில் உள்ள நிங்போ துறைமுகங்களில் வணிகம் தடைபட்டால் பெரும் அச்சுறுத்தல் உருவாகும். ஏனெனில் அவை உலகின் பெரும்பாலான ஸ்மார்ட் போன், கணினி, மருத்துவ சாதனங்கள் உட்பட பல்வேறு இயந்திர உதிரி பாகங்கள் தயாரிக்கும் சீன தொழிற்சாலைகளை வெளிநாட்டு வாடிக்கையாளர்களுடன் இணைக்கின்றன.
யான்டியன் துறைமுகத்தில் பணிகள் முடங்கினாலும் மின்னணு பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதி முழுமையாக பாதிக்கப்படும். கடந்த ஆண்டு இத்துறைமுகம் முடங்கியதால் ஆயிரக்கணக்கான கப்பல்கள் தேங்கின. சர்வதேச அளவில் அது பாதிப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement