பெர்லின்: மார்ச் முதல் ஜெர்மனியில் கோவிட் தொற்று எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், தற்போது கடந்த வாரத்தை காட்டிலும் கூடுதலாக 22% பேரிடம் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பான ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் தகவலின் படி புதிதாக 262,593 பேரிடம் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த வாரத்தில் இருந்ததை விட 22% அதிகம் என கூறியுள்ளனர். இதன் மூலம் ஜெர்மனியில் இதுவரை கோவிட் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 1.8 கோடியை நெருங்கி வருகிறது. இன்றைய (மார்ச் 16) நிலவரப்படி 1 லட்சம் பேரில் 1,607 பேரிடம் தொற்று காணப்பட்டுள்ளது. இது முந்தைய நாள் நிலவரமான 1,585ஐ விட அதிகம். மேலும் 269 பேர் புதிதாக கோவிட் பாதிப்பால் இறந்துள்ளார்கள். பலி எண்ணிக்கை 126,142 ஆக உள்ளது.
இருப்பினும் அடுத்த வாரம் முதல் கட்டுப்பாடுகளை தளர்த்தும் சட்டத்தை பாராளுமன்றம் ஏற்க உள்ளது. அதே போல் உள்ளரங்க பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடுப்பூசி போடாதவர்களுக்கு இருந்த தடையையும் ஏற்கனவே தளர்த்தியுள்ளது. இதுவும் கோவிட் பரவ காரணம் என்கின்றனர். தொற்று பாதிப்புகள் அதிகரித்தாலும் பலர் தடுப்பூசி போட்டிருப்பதால் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் ஆபத்து இல்லை என அரசு வாதிடுகிறது. மேலும் ஒமைக்ரான் தொற்றால் லேசான பாதிப்புகளே இருப்பதாக கூறியுள்ளது.
Advertisement