சென்னை:
மாமல்லபுரத்தில் பீடே செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் என்று தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் துரிதமாக எடுத்த நடவடிக்கையால் தமிழக விளையாட்டுத்துறை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய நாள் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
2022-ம் ஆண்டுக்கான செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தும் வாய்ப்பில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. அகில இந்திய செஸ் சம்மேளனமும், தமிழக அரசும் இணைந்து இந்த சாதனையை புரிந்துள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் பீடே செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த அடிப்படையில் முதல்-அமைச்சர் இந்த விளையாட்டு போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.
மேலும் 2021 செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு முதல்- அமைச்சர் உடனடியாக அந்த விளையாட்டு வீரர்களை அழைத்து ரூ.1.98 கோடி ஊக்கத்தொகையாக வழங்கினார்.
இந்தியாவில் இருக்கின்ற 73 கிராண்ட்மாஸ்டர்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான் அதிகம். விஸ்வநாதன் ஆனந்த் செஸ் போட்டியை உலக அளவில் கொண்டு சென்று பெருமை சேர்த்தார்.
முதல்- அமைச்சர் பொறுப்பேற்ற பிறகு விளையாட்டுத்துறை மேம்பட்டு வருகிறது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தும் அரிதான வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்த தமிழக அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. ஜூலை- ஆகஸ்டில் இந்த போட்டியை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல்களில் செஸ் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளோம்.