லக்னோ: காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உத்தரவுபடி, 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர். ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யுமாறு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டார். அதையடுத்து கோவா, உத்தரகாண்ட் மாநில தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். தொடர்ந்து உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு, கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘உத்தரபிரதேச தேர்தல் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று, எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என்றார். இந்நிலையில் இன்று காலை பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து, தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் வார்ரூமில் இருந்து, உத்தரபிரதேச தேர்தல் தோல்வி குறித்து உத்தர பிரதேச தேர்தல் பொறுப்பாளரும், கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, 5 மாநில காங்கிரஸ் தலைவர்களும் தங்களது தலைவர் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.