புதுடெல்லி: ஜனநாயகத்துக்கும் நாட்டுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வாரிசுஅரசியலை எதிர்த்துப் போராடுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித் துள்ளார். பாஜக எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நேற்று காலை நடந்தது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் உத்தரப்பிரதேசம் , உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 4 மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடிக்கும் கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கும் கூட்டத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய தாவது:
சமீபத்தில் நடந்து முடிந்துள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக பெற்ற மகத்தான வெற்றி கட்சியின் மீதும் பாஜக தலைமையிலான அரசு மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. மக்கள் நம்பிக்கையை மேலும் பெறும் வகையில் தொடர்ந்து பணியாற்றுவோம். ஜனநாயகத்தில் குடும்ப அரசியல் ஏற்புடையதல்ல. பாஜகவில் வாரிசு அரசியலுக்கு இடமில்லை.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக எம்பி.க்கள்மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர்தங்களின் வாரிசுகள் போட்டியிட வாய்ப்பு கேட்டனர். எம்.பி.க்கள்,கட்சி நிர்வாகிகள் பலரின் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. வாரிசுகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதற்கு நான்தான் காரணம்.
காஷ்மீர் முதல் குமரி வரை
பாஜகவில் வாரிசு அரசியலை அனுமதிக்க மாட்டோம். வாரிசு அரசியல் சாதிவெறியை ஊக்குவித்து நாட்டுக்கு கேடு விளைவிக்கும். ஜனநாயகத்துக்கும் நாட்டுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வாரிசு அரசியலை எதிர்த்துப் போராட வேண்டும்.
2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக வாரிசு அரசியலுக்கு எதிரான விழிப்புணர்வை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஏற்படுத்த வேண்டும். மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுள்ளனர். பொதுமக்கள் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்.
‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்துக்கு பாராட்டு
பிரதமர் மோடி பேசுகையில், ‘‘காஷ்மீரில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்ட இந்து பண்டிட்களின் சோகக் கதையை ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் பதிவு செய்துள்ளது. நீண்டகாலமாக மறைக்கப்பட்ட உண்மை இப்போது வெளிவருகிறது. கருத்துரிமைக்காக எப்போதும் கொடி பிடிப்பவர்கள் இந்தப் படத்தால் பதற்றத்தில் உள்ளனர். உண்மைகளை பரிசீலிக்காமல் இந்தப் படத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர். உண்மைகளை மறைக்க முயன்றவர்கள் இப்போது இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ போன்ற உண்மையை வெளிப்படுத்தும் படங்கள் அதிகமாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட வேண்டும்’’ என்றார்.