2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டுமே, 35,260 புலம்பெயர்ந்தோருக்கு கனடா புதிதாக நிரந்தர வாழிட உரிமம் வழங்கியுள்ளதாக கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
கனடாவின் 2022 – 2024க்கான புலம்பெயர்தல் மட்ட திட்டத்தின்படி, கனடா சுமார் 432,000 புதிய புலம்பெயர்வோரை இந்த ஆண்டில் வரவேற்கத் திட்டமிட்டுள்ளது. வரலாற்றிலேயே இது மிகவும் உயர்ந்த எண்ணிக்கையாகும்.
ஜனவரியில், புதிதாக நிரந்தர வாழிட உரிமம் பெற்ற 35,260 புலம்பெயர்ந்தோரில் 65 சதவிகிதம் பேர், பொருளாதார வகுப்பின் கீழ் புலம்பெயர்ந்தவர்கள் ஆவர். 20 சதவிகிதத்தினர் குடும்ப பிரிவு, 15 சதவிகிதத்தினர் அகதிகள் மற்றும் மனிதநேய பிரிவின் கீழும் நிரந்தர வாழிட உரிமம் பெற்றுள்ளார்கள்.
பொருளாதார வகுப்பின் கீழ், கனேடிய அனுபவ பிரிவின் கீழ்தான் அதிகம்பேர் நிரந்தர வாழிட உரிமம் பெற்றிருக்கிறார்கள். அவ்வகையில் நிரந்தர வாழிட உரிமம் பெற்றவர்கள் சுமார் 7,700 புலம்பெயர்ந்தோர். அதற்கு அடுத்தபடியாக, 7,000 பேர் தற்காலிக வாழிட உரிமத்திலிருந்து நிரந்தர வாழிட உரிமமாக மாற்றும் திட்டத்தின் கீழும், மூன்றாவதாக, மாகாண நாமினி திட்டத்தின் கீழ் 4,200 புலம்பெயர்ந்தோரும், அதைத் தொடர்ந்து பெடரல் திறன்மிகு பணியாளர் திட்டத்தின் கீழ் சுமார் 2,600 புலம்பெயர்வோரும் நிரந்தர வாழிட உரிமம் பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு பெருந்தொற்றுப் பிரச்சினை காரணமாக பெடரல் திறன்மிகு பணியாளர் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதில் தொய்வு ஏற்பட்ட நிலையில், தற்போது, கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு விண்ணப்பங்களை வேகமாக பரிசீலித்து வருவது தரவுகளிலிருந்து தெரியவந்துள்ளது.
ஆக, சென்ற ஆண்டைப் போலில்லாமல், இந்த ஆண்டில் கனடா தன் புலம்பெயர்தல் இலக்கை எளிதில் எட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அத்துடன், பெருந்தொற்றுக்கு முன் இருந்தது போலவே, பெரும் எண்ணிக்கையிலான நிரந்தர வாழிட உரிமங்களை பரிசீலிப்பது சாத்தியம் என்பதை கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு நிரூபித்துள்ளது.
மேலும், விண்ணப்பங்கள் பரிசீலிக்கும் முறையை நவீனமயமாக்குவதற்காக கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு பெருந்தொகை முதலீடு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.